Monday, 22 October 2018
தில்லுமுல்லு தேர்தல்..!
நடந்து முடிந்த ம.இ.கா. மேல்மட்டத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டான்ஸ்ரீ இராமாசாமி ஓர் 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்டிருக்கிறார். அவர் குற்றச்சாட்டு: கள்ள வாக்குகள் கரைபுரண்டு ஓடின! தில்லுமுல்லுகள் தலைவிரித்தாடின! அநீதீயான அக்கப்போரான ஒரு தேர்தல்! என்று அவர் சொல்லுகிறர்.
நமக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. டான்ஸ்ரீ என்ன சொல்ல வருகிறார்? ம.இ.கா. வில் இது வரை நடந்த தேர்தல்கள் எல்லாம் நீதியாக நடந்தன என்று சொல்ல வருகிறாரா? அவருக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்தால் முதலில் அதனை மறக்க வேண்டும். நீதி, நியாயம் பற்றி ம.இ.கா.விடம் கேட்பது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை நம்மிடம் சொல்ல வருகிறார்!
ம.இ.கா. எந்தக் காலத்தில் நீதி, நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்? தலைமைத்துவத்தை சார்ந்த, தலைவர்களுக்குக் கீழ்படிந்த, சொன்ன சொல்லைக் கேட்கிற, தலைவருக்குத் தலை ஆட்டுகிற ஆட்டுக்குட்டிகள் தான் அவர்களுக்குத் தேவைப் படுகின்றனார்! இதில் போய் என்ன நீதி, நேர்மை?
கொள்ளை அடிப்பவர்களுக்கென்று தனிப் பாதை உண்டு. அந்தப் பாதையில் பயணம் செய்வது என்பது தனி கலை. எல்லாராலும் அதில் பயணம் செய்ய முடியாது. அந்தப் பாதையில் பயணம் செய்ய 'முற்றும் துறந்தவர்களாக' இருக்க வேண்டும்! மானம், ஈனம், வெட்கம். ரோஷம் எதுவும் இல்லாத மரக்கட்டைகளாக இருக்க வேண்டும். அது ஒரு தனி வழி!
அந்தச் சூழலில் ஒத்துப் போகுபவர்கள் தான் தலைமைத்துவத்துடன் ஒத்து ஊத முடியும்! அது தான் ம.இ.கா. . தேர்தல். பொதுவான அரசியலே அப்படித்தான். ஆனால் தொண்டு அல்லது சேவை மட்டுமே என்று நினைக்கும் அரசியல் என்பது வேறு. ஆனால் இவர்கள் சூழல் வேறு. வாழ்ந்த பின்னணி வேறு. பணம் ஒன்று மட்டுமே குறிக்கோள். "இனி என் குடும்பம் கஷ்டப்படக் கூடாது" என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள்! ஆனால் பாவம்! அவர்களின் குடும்பத்திற்கு அவமானத்தையும், மக்களின் சாபத்தையும் இவர்கள் மூலம் தொடர்வது தான் மிச்சம்.
டான்ஸ்ரீ இராமசாமிக்கு நாம் சொல்லுவதெல்லாம் ஒன்று தான். ம.இ.கா. கடைசி காலம் வரை இப்படித்தான் இருக்கும். ஏதோ இருக்கிற சொத்துக்களைப் பங்குப் போடுவது தான் நோக்கமே தவிர, வேறு நோக்கம் அவர்களிடம் இல்லை! இந்தியர்கள் ம.இ.கா. வுக்கு மீண்டும் வருவார்கள் என்பதெல்லாம் வெறும் கனவு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாததை இனி இவர்கள் செய்வார்கள் என்பதெல்லாம் சும்மா சால்ஜாப்பு என்பார்களே அது தான்!
தில்லுமுல்லுகளைத் தவிர இவர்களிடம் வேறொன்றுமில்லை!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment