Monday 22 October 2018

பக்காத்தான் ஆட்சியில் இதுவரை...!

பக்காத்தான் நூறு நாள் ஆட்சியில் என்னத்தைச் சாதித்தார்கள் என்று கேட்டால் அப்படி  மெச்சும் படியாக ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி வரும். அந்த நூறு நாள் சாதனைகள் எல்லாம் வெறும் தேர்தல் கால வாக்குறுதிகளாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் பக்காத்தான் வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. அதே போல பாரிசான் தோல்வியுறும் என்பதும் கனவில் கூட தோன்றவில்லை.

ஆனால் பக்காத்தான்  வெற்றி பெற்று விட்டது. அதுவே பெரிய சாதனை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் சரியானவைகள் தான். 

அரசாங்க ஊழியர்களை அவர்களால் மாற்ற முடியவில்லை. ஊழல் ஆட்சியில் திளைத்தவர்கள், மக்களிடமிருந்து நக்கித் தின்றவர்கள் - இவர்களை மாற்றுவது என்பது லேசு பட்டம் காரியம் அல்ல! குட்டி நெப்போலியன்களாக வலம் வந்தவர்கள். இளைத்தவனைப் பார்த்தால் இளக்காரமாகப் பார்க்கின்ற ஜென்மங்கள்.  ஏதோ அவர்கள் ராஜப் பரம்பரைகள் என்பதாக ஒரு நினைப்பு.

ஆக, இந்த மன நிலையில் வலம் வந்தவர்களை ஒரே நாளில் மாற்றி விட முடியாது. அல்லது நூறு நாள்களில் மாற்றி விட முடியாது. வேலை செய்யாமலே சம்பளம் வாங்கியவர்கள். இப்போது வேலை செய்யச் சொன்னால் எப்படி? அவர்களுடைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் எல்லாவற்றையும் விட ஒன்று மட்டும் மிக அடக்க, ஒடுக்கமாக  நிறைவேறியிருக்கிறது! ஊழலை ஒழிப்போம் என்கிற  தேர்தல் வாக்குறுதி மட்டும் சத்தம் இல்லாமல் நிறைவேறியிருக்கிறது. அரசாங்கம் சொல்லும் வரை யாரும் காத்திருக்கவில்லை. 

இலஞ்சம் என்கிற வார்த்தைக்கு  மட்டும் இப்போது பஞ்சமாகி போய்விட்டது. அதிகாரியோ, அடிமட்ட ஊழியனோ இலஞ்சம் என்று சொன்னாலே பயப்புடுகிறான்! எவனும் வாய் திறப்பதில்லை. கேட்கவும் பயப்புடுகிறான். கொடுக்கவும்  பயப்புடுகிறான்.  கேட்டாலும் அகப்படுவான்! கொடுத்தாலும் அகப்படுவான்! இது தான் இன்றைய நிலை! 

இந்த 14-வது பொதுத் தேர்தலின் வெற்றி இன்றைய நிலையில் இது மட்டும் தான். நாம் அதிகம் அழுத்தம் கொடுக்காமலே வந்த வெற்றி என்றால் அது "இலஞ்சம்" மட்டும் தான்! இது சாதாரணம் விஷயம் அல்ல!

புதிய அரசாங்கத்தின் வெற்றி, மிகப் பெரிய வெற்றி - இலஞ்ச ஒழிப்பு!

No comments:

Post a Comment