Sunday 7 October 2018

வாசிப்பது கடைசிவரை....!

வாசிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. சிறிய வயதினரோ, பெரிய வயதினரோ வாசிப்பதை நிறுத்தக் கூடாது. எந்நாளும் வசிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன நடக்கிறது?

ந்மது இளைஞரிடையே படிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை!  அவர்கள் படிக்கும் செய்திகள் எல்லாம் "வாட்ஸப்" மூலம் தான்! சரி வாட்ஸப் மூலம் அவர்களுக்கு அப்படி என்ன செய்திகள் கிடைக்கின்றன? எவன் செத்தான், எவன் வெட்டினான் போன்ற செய்திகள் தான் அதிகம்! அது போன்ற செய்திகள் தான் அவர்களைச் சுண்டி இழுக்கின்றன! 

மற்றபடி இணயத்தைப் பயன்படுத்தி படிக்கின்ற பழக்கமும் குறைவு தான். நான் இங்குக் குறிப்பிடுவது பெரும்பாலும் கல்லூரியில் படிக்கின்ற இளைய தலைமுறையைப் பற்றி தான்.
இதோ என் அருகிலேயே  நான்கு  இளைஞர்கள்.  செய்முறை பயிற்சிக்காக வந்திருக்கிறார்கள்.  இவர்கள் நாளிதழ்கள் படிப்பதை நான் பார்க்கவில்லை. இணையத்தில் செய்திகளைப் படிப்பதை நான் பார்க்கவில்லை. அரட்டை அடிப்பது தான் அதிகம்.  அதைவிட தங்களுடைய கைப்பேசியில் என்ன தான் செய்கிறார்கள் என்பதே நமக்குப் புரியவில்லை! கைப்பேசியுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்!

இவர்களின் மூன்று மாணவர்கள் அடுத்து பட்டப்படிப்பை மேற்கொள்ளப் போகிறர்கள். நல்லது. சரி எந்தப் பல்கலையில் படிக்கலாம், படிக்கப் போகலாம், அரசாங்கமா தனியார் கல்லுரிகளா என்று இணயத்தைத் திறந்து கொஞ்சமாவது பார்ப்பார்களா என்றால் ...ஊகூம்.... கொஞ்சம் கூட அந்த அக்கறை இல்லை! பெற்றோர்களுக்குச் செலவு வைப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். பெற்றோர்கள் வசதியானவர்கள் என்றால் கவலையில்லை. ஆனால் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங்கள். அரசாங்கக் கல்லுரிகள் என்றால் செலவுகள் கொஞ்சம் குறைவு.  அதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை! இவர்களைப் பற்றி நாம் என்ன சொல்லுவது?

வாசிக்கும் பழக்கம் பெற்றோரிடமிருந்து வர வேண்டும். அப்போது தான் அது பிள்ளைகளுக்கும் வரும். நாளிதழ்கள் இல்லையென்றாலும் இணையத்தில் உள்ள நாளிதழ்கள், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று அனைத்தையும் படிக்க முடியும். அவைகளையாவது அவர்கள் படித்தால் உலகத்தைப் பற்றி அல்லது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

வாசிப்பது கட்டாயம். கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்பார்கள். கண், கண்டு, தேர்ந்து கொண்டு, படிப்பது நம்மையும் கல்வி கற்ற பண்டிதனாக்கும்!  

வாசியுங்கள்! அது உங்களை உயர்த்தும்!

No comments:

Post a Comment