Monday 15 October 2018

22 மாணவர்கள் தானா..?


சமூக சேவையாளர் டத்தோ சௌந்தரராஜன் ஓர் அதிர்ச்சி செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

கப்பளா பத்தாஸ் பகுதியில் உள்ள ஐ.எல்.பி.  தொழிற்பள்ளி ஒன்றில் சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் அதில் இந்திய மாணவர்கள் சுமார் 22 பேர் மட்டுமே என்று அறியும் போது நமக்கு வருத்தைத்தை அளிக்கிறது.

பல தொழிற்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இந்திய மாணவர்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றனர். காரணம் அவர்களுக்குத் தேவை இல்லை. வேண்டாம்! அவ்வளவு தான். அதற்கான  அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர்களே நினைத்துக் கொள்ளுகின்றனர்! அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பது நமக்கும் தெரியும். என்ன செய்வது? நமக்குத் தலையாக இருந்தார்களே அவர்களுக்குத் தெரியவில்லை!

இதுவும் ஒரு காரணம். இந்திய மாணவர்கள் தொழிற் பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு. ஒரு பக்கம் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது - இன்னொரு பக்கம் அவர்களை வர விடாமல் தடுப்பது என்பது தான் முன்னைய அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வந்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டு என்னவோ இந்திய மாணவர்கள் மீது.

அவர்கள் பேசுவதில் உண்மை இருந்தால் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்ட  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பள்ளிகளிலேயே அந்தச் செய்திகள் கொடுக்கப்பட வேண்டும். பத்திரிக்கைகளிலே அந்தச் செய்திகள் போடப்பட வேண்டும். பத்திரிக்கைகளிலே தனியார் பள்ளிகளின் விளம்பரங்கள் மாணவர்களின்  கவனத்தை ஈர்க்கின்றன. 

அது மட்டும் அல்லாமல் ஏன் அரசு தொழிற்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் நமக்குத் தெரிய வேண்டும். பெரும்பாலும் உணவு என்று வரும் போது இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பொதுவாக மாட்டிறைச்சி உணவு அல்லது பன்றி இறைச்சி உணவு என்பதெல்லாம் வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். கோழிறைச்சி, மீன் போன்ற உணவுகள் பொதுவானவை. இது போன்ற உணவுகளால் எந்த மாணவர்களும் பாதிக்கப்படுவதில்லை.

இது போன்ற இன்னும் சில 'கெடுபிடிகள்' இந்திய மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். அவைகளைக் களைய வேண்டும். பொதுவாக எல்லா மாணவர்களும் ஏற்றுக்கொள்ளும் படியான சூழல் இருக்க வேண்டும்.

22 மாணவர்கள் என்பது மாற வேண்டும். காரணங்கள் நமக்கு வேண்டாம்.  இனி மேலும் இது தொடரக் கூடாது என்பதே நமது வேண்டு கோள். 

டத்தோ சௌந்தரராஜன்  அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.  இப்படி பலரும் தங்கள் அருகில் உள்ள தொழிற்பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் என்பதைத் தெரிந்து புகார் செய்ய வேண்டும்.

இனி 220 மாணவர்கள் என்பதாக செய்திகள் வர வேண்டும்! வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment