Wednesday 24 October 2018

கல்வி அமைச்சரிடம் ஒரு கேள்வி..!

சமீபத்தில் நடைபெற்ற தேசியக் கல்வி சீரமைப்பு - கல்வியமைச்சு கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் கூறியதாவது:     

                     "ஒரு தமிழரால்  தான் (துணைக் கல்வி அமைச்சர்) தமிழ்ப்பள்ளிக்குச்  செயலாற்ற இயலும் என்ற எண்ணம் மாற வேண்டும்."

இந்தக் கருத்து நியாயமானது தான். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அதே கலந்துரையாடலின் போது ஒரு சீனரான துணைக் கல்வி அமைச்சரும் அதில் கலந்து கொண்டார்.

துணைக் கல்வி அமைச்சரின் பணி என்ன? சீனப் பள்ளிகளின் நலன் தான் அவரின் முதல் பணி.  தேசியப் பள்ளிகள் என்றால் கல்வி அமைச்சரே நேரடியாக கலந்து கொள்வார். அப்படியே  துணைக் கல்வி அமைச்சர் அங்கு போனாலும் அவர் திறந்த மனதுடன் வரவேற்கப்படமாட்டார்! நிச்சயமாக ஒரு சீனரை அவர்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

எப்படிப் பார்த்தாலும் கல்வி அமைச்சர் மட்டும் தான் தேசியப் பள்ளிகளில் வலம் வர முடியும்.

அப்படியென்றால் துணைக்  கல்வி அமைச்சரின் பணி என்ன? அவரின் முக்கிய பணி சீனப்பள்ளிகள் தான். சீனப்பள்ளிகளும் அவரைத் தான் விரும்பவர். அவருடன் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவர். காரணம் அவர்கள் ஓர் இனம். அவருடன்  பேசும் போது அவர்கள் பேசுவது இயல்பாக இருக்கும். மேலும் அமைச்சரும் சீன வழி கல்வி கற்றவர். அவர்களுக்குச் சாதகமாகத்தான் அவர் இயங்குவார்.  ஒன்றைச் சொல்லலாம். எத்தனையோ ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த சீனப் பள்ளிகளின் UEC  சான்றிதழ்   பிரச்சனையை ஒரு சில நாள்களிலேயே முடித்து வைத்தார். அதாவது அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை அது தான்.  தமிழ்ப்பள்ளிகளைப் பழுது பார்க்க மானியம் இல்லை ஆனால் சீனப்பள்ளிகள் புதிதாகக் கட்ட மானியம் உண்டு என்பதை சமீபத்தில் காட்டியிருக்கிறார்.

அவர் செய்தது தவறு என்று நான் சொல்லவில்லை. இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். நான்  அதனை  விரும்புகிறேன். தமிழர்களைத் தவிர  வேறு யாரும் பெருந்தன்மை என்னும் சொல்லைப் பயன் படுத்துவதில்லை! நம்   இளிச்சவாயத்தனம்  தான்  நமது  பெருந்தன்மை  என்பது!

இந்த  நிலையில்  தமிழ்ப்பள்ளிகளின் ஒவ்வொரு  பிரச்சனைக்கும்  ஒரு  மலாய் கல்வி  அமைச்சரைப் போய் பார்ப்பது என்பது நிச்சயமாக அது  ஓர்  இயல்பான  உரையாடலாக  இருக்காது. மேலும் அமைச்சர் நேரடியாக எந்த உரையாடலிலும் கலந்து கொள்ளப்போவதில்லை. அவருடைய அதிகாரிகளில் ஒருவரை அனுப்பி வைப்பார். இதெல்லாம் எந்தப் பயனையும் அடைய வழியில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒரு தமிழரால் தான் நமது பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான்.  ஓரு மலாய் அமைச்சராலோ, மலாய் அதிகாரியோ 'வேண்டுமென்றே' பிரச்சனைகளைப்  புரிந்து கொள்ள மாட்டார்கள்!

கல்வி அமைச்சர் சொல்வதில் நமக்கு உடன்பாடில்லை. அவரோ, அவரின் அமைச்சை சார்ந்தவர்களாளோ தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது  என்பதே நாம் முன் வைக்கும் வாதம்.

கல்வி அமைச்சரிடம் ஒரே கேள்வி: உங்களால் முடியுமா என்பது தான்!




No comments:

Post a Comment