பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள இந்து ஆலயங்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம் விட்டால் பலவிதமானப் பிரச்சனைகளை அவைகள் எதிர் நோக்குகின்றன.
இந்தப் பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்குகின்றன? நிச்சயமாக அது அரசாங்கத்திடமிருந்து அல்ல என்பது உறுதி. ஒவ்வொரு கோவிலிலும் தலைமைத்துவ பிரச்சனைகள் தான் தலை தூக்கி நிற்கின்றன! ஒவ்வொருவரும் தலைவர்கள் ஆக வேண்டும் என நினைக்கின்றார்கள்! பதவி கிடைக்காத போது என்னன்னவோ பெயரில் போராட்டங்கள் நடத்துகின்றார்கள்! இந்தப் போராட்டங்கள் மூலம் யாரும் எந்தப் பயனையும் அடைவதில்லை!
சரி அப்படியென்றால் பயன் அடைபவர் யார்? இவர்களே பிரச்சனைகளை உருவாக்கி அந்தப் பிரச்சனைகளை எங்குக் கொண்டு செல்லுகிறார்கள்? முதலில் தான் சார்ந்த அரசியல் கட்சி! அந்த அரசியல் கட்சியின் தலைவர் அவருக்கு வேண்டியவராக இருக்கலாம். அவருக்கு அவர்களுடைய ஆதரவு தேவை. அதனால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்பார். அவரால் முடியாது. அதன் பின்னர் கொஞ்சம் பயமுறுத்துவதற்காக நகராண்மைக் கழகத்தை உள்ளே இழுப்பார்.
இப்போது அந்த இந்து கோவிலின் பிரச்சனை அரசாங்கப் பிரச்சனையாக மாறிவிடும்! நகராண்மைக் கழகம் இந்து கோவில்களை உடைப்பதில் தீவிரம் காட்டும். அவர்களுக்கு கோவில்களை இடிப்பதில் ஏகப்பட்ட சந்தோஷம். உடனே ஆர்ப்பாட்டம், பதாகைப் போராட்டம் இப்படியே தொடரும்.
இந்தப் பிரச்சனை எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் முடியும். உண்மையைச் சொன்னால் இப்படி ஒரு பிரச்சனை தேவையே இல்லை! தலைமைத்துவ போட்டி என்பது இயல்பு தான். ஆனால் அது ஜனநாயக முறையில் சந்திக்க வேண்டும். தேர்தல் வரும் போது அதைச் சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கிடையில் கோவிலில் பிரச்சனைகளை உருவாக்கக் கூடாது. கோவில் என்பது பொது இடம். அது மக்களின் வழிப்பாட்டுத் தலம். அங்குப் பிரச்சனைகளை உருவாக்கி மக்கள் வழிபட தடையாய் இருப்பது மிகவும் பாவமானச் செயல். இப்படிச் செய்வதெல்லாம் சாபம் என்பதை உணர வேண்டும். பதவிக்குக் குறுக்கு வழியெல்லாம் கிடையாது. உழைப்பு, தொண்டு மட்டுமே பதவியைக் கொண்டு வரும்.
இந்து கோவில்களில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
No comments:
Post a Comment