Saturday 6 October 2018

விரும்பத்தகாத பெயர்கள்...!

விரும்பத்தகாதப்  பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்க வேண்டாம் என தேசியப் பதிவு இலாகா பெற்றோர்களுக்கு அறிவுரைக் கூறுகிறது.

வரவேற்கிறோம்!  இவர்களின் அறிவுரை யாரை நோக்கிச் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். தேசியப் பதிவு இலாகா சொல்லுவதைப் பார்க்கும் போது அது மலாய்ப் பெற்றோர்களை நோக்கித் தான் சொல்லப்படுகிறது என்பதாகத் தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. காரணம் தேசியப் பதிவு இலாகாவில் வேலை செய்பவர்கள் மலாய்க்காரர்கள். அதனால் அவர்கள் சொல்லுகின்ற அறிவுரை மலாய்க்காரர்களுக்குத் தான் என நாம் சொன்னால் தவறு ஏதுமில்லை.

ஆனால் இந்தியர்களுக்கும் இந்த வேண்டத்தகாத, விரும்பத்தகாத பெயர்கள் பெற்றோர்களால் சூட்டப்படுகின்றன என்பதையும் நாம் பதிவு இலாகாவின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

சிலருடைய பெயர்களைப் பார்க்கும் போது அவர்கள் எந்த ஊர், எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது! கடைசியில் பார்த்தால் நிறம், தமிழன் நிறம், கையிலே ஒரு மந்தரித்த கயிறு - அவன் பச்சைத் தமிழனாக இருப்பான்!  நாம் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! யாருடா இவனுக்குப் பெயர் வைத்தது என்று கோபப்பட வேண்டியிருக்கும்!

இதற்கு முக்கிய காரணம் நமது கோயில் அர்ச்சகர்கள். இவர்கள் ஏதோ பெயர் வைப்பதில் நிபுணர்கள் போல பெயர்களை ஷாவில் துவங்குவது போல வையுங்கள், ஸ்ரீ யில் வையுங்கள், ப் பில் வையுங்கள்,  ரு வில் வையுங்கள்,  ஞ் சில் வையுங்கள் என்று எதற்கும் ஒத்துவராத பெயர்களை வைக்கச் சொல்லுகிறார்கள்! பாவம் இந்த இளம் பெற்றோர்கள்! அங்கும் அறியாமை, இங்கும் அறியாமை! எப்படி எப்படியோ பெயர்களை வைக்கிறார்கள்! அதற்குப் பதில் சினிமா நடிகன் பெயர் வைத்தாலாவது அவன் தமிழன் என்கிற ஓர் அடையாளமாவது இருக்கும்!

ஒரு முறை இளைஞர் ஒருவர் தனது மகளுக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று கணினியில் தேடச்  சொன்னார். அவர் கொடுத்த எழுத்தை வைத்து அப்படி ஒன்றையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று கொஞ்சம் ஒத்து வந்தது. ஆனால் அதன் பொருள் என்னவென்றே புரியவில்லை! அனாலும் அது தான் வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தார்! அவர் ஒரு காரணம் சொன்னார்: "ஏதோ என் மகள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும்!"  என்று.  நான் அவரிடம் சொன்னேன்: பரவாயில்லை! அந்தப் பெயரோடு ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்துக் கொள் என்று.  செய்தாரா செய்யவில்லையா என்பது தெரியவில்லை! 

ஆனால் இவைகள் எல்லாம் தேசியப் பதிவு இலாகாவின் கவனத்திற்கு எப்படிக்  கொண்டு செல்வது?  பார்க்கலாம். புதிய அரசாங்கத்திலாவது  இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்றூ.

No comments:

Post a Comment