Wednesday 17 October 2018

இன்னுமா மிரட்டல் அரசியல்...?

ம.இ.கா.வினரை நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆட்சியில் இருக்கும் போதும் குத்துச் சண்டை, மல்யுத்தம் என்று குண்டர்களின் தலையீடு.  அப்போதும் மக்கள் அவர்களால் எந்தவித பயனையும் அடையவில்லை.!

இப்போது அவர்களை முற்றிலுமாக மக்கள் விளக்கமாற்றல் அடித்து துரத்தி அடிக்கப்பட்டு விட்டாளர்கள்! ஏற்கனவே ஏதோ பதவியில் இருந்த போது கொஞ்சம் நஞ்சம் - பிடுங்கி தின்பவர்களிடமிருந்து -  மரியாதை இருந்தது. இப்போது அதுவும் இல்லை. மரியாதைக்குரியவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. மக்கள் மதிக்கின்ற அளவுக்கு அவர்கள் பதவியில் இருந்த போது தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இப்போது ம.இ.கா. தேர்தல் நேரம். ம.இ.கா. தேசிய துணைத் தலைவர் பதவிக்கு  டான்ஸ்ரீ எம்.இராமசாமி என்னும் தொழிலதிபர் போட்டியிடுவதாக அறிவிப்புக்கள் வெளியாயின. அவர் இப்போது  அறிவிப்பை ஒன்றை செய்திருக்கிறார். அவரின் பிராச்சாரத்தை  ஒரு சிலர் முடக்க நினைப்பதாக கூட்டம் ஒன்றில் அறிவித்திருக்கிறார். ஒரு சிலர் என்னும் போது அது அடியாட்கள் என்பதைத் தவிர வேறு யாராக இருக்கப் போகிறார்கள்?

ஆனால் ஒன்று புரியவில்லை. முன்பு ம.இ.கா.வில் இருந்த போது பதவி, பட்டம், சுகம் எல்லாம் கிடக்கும். இப்போது எதுவும் கிடைக்க நியாயம் இல்லை. முன்பு அரசாங்கப் பணத்தில் கட்சியை நடத்தி வந்தார்கள். இனி அதற்கும் வாய்ப்பில்லை. முடிந்த வரை சொந்தப் பணத்தைப் போட்டு கட்சி நடத்த வேண்டும். கிளைத் தலைவர்கள் தங்களது உறுப்பினர்களின் சந்தாவை அவர்களே கட்டி விடுவார்கள். இனி இதெல்லாம் நடக்குமா என்பது எனக்கும் புதிராகத்தான் இருக்கிறது. காரணம் இனி இவர்களுக்கு மாநில சுல்தான்களின் பட்டம் கூட கிடைக்கப் போவதில்லை. எதுவுமே இல்லை என்னும் போது இவர்களுக்கு என்ன தலைவிதியா தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு கட்சி நடத்துவதற்கு?

ஆக,  இப்படி எந்த பலனுமே இல்லாத நிலையில் ஏன்  தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் பிரச்சாரத்தை முடக்க நினைக்கிறார்கள்? ஏன் பயமுறுத்துகிறார்கள்? டான்ஸ்ரீ இராமசாமி  நல்லதை செய்வேன் என்று தானே சொல்லுகிறார். இந்தியர்ளை மீண்டும் ம.இ.கா. பக்கம் கொண்டு வருவேன் என்று தான் சொல்லுகிறார். ஒன்று தெரிகிறது. " இருப்பவர்கள் அப்படியே இருப்போம். புதியவர்கள் யாரும் தேவையில்லை"  என்று  யாரோ நினைக்கிறார்கள்  என்று தானே நாம் நினைக்க வேண்டியுள்ளது! ஏன் கட்சியில்  புதிய  மாற்றம் தேவை இல்லை என்று நினைக்கிறார்கள்? 

கட்சியினால் யாருக்கும் பயனில்லை.  பயனடைபவர்கள் தலைவர்கள் மட்டும் தான். இப்போது தலைவர்களின்  பார்வை எல்லாம்  ம.இ.கா.வின் சொத்துக்களின் மீது தான்  என்று  தான்  நினைக்கத்  தோன்றுகிறது. மற்றபடி சேவை என்றெல்லாம் ஒன்றை இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!  அந்த சொத்துக்களின் மீது கண் உள்லவர்களிடமிருந்து தான் இந்த மிரட்டல் வருகிறது என்று  தான் நாம்  நினைக்க வேண்டியுள்ளது.

என்ன  நடக்கிறது என்று பார்ப்போம்>

No comments:

Post a Comment