Monday 8 October 2018

பொன்னாடை வேண்டாம்...!

"என் இலக்கு நிறைவேறும் வரை எனக்குப் பொன்னாடையும்  வேண்டாம் மலர் மாலையும் வேண்டாம்! பொன்னாடையையும் சுமக்கப் போவதில்லை, மலர் மாலையையும்  சுமக்கப் போவதில்லை!"  எனக் கூறியிருப்பவர் பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

சமீபத்தில் நடந்து தெலுங்கு மாநாட்டில் இதனைக் கூறியிருக்கிறார் வேதமூர்த்தி. மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.

நாம் என்ன செய்ய வந்தோம்?  நமது கடைமைகள் என்ன? நமது சமுதாயத்தின் நிலை என்ன?  போன்ற கேள்விகளோடு அரசியலுக்கு வருபவன் தான் தலைவன். அப்படித்தான் ஒவ்வொரு தலைவனும் வருகிறான். வந்தவன் தனது கடமையை மறந்து பொன்னாடைக்கும், பூமாலைக்கும் சேவை செய்பவனாகி விடுகிறான்!  யார் பெரிய மாலை போடுகிறார்கள், யார் சிறிய மாலை போடுகிறார்கள் என்று கணக்குப் பண்ண ஆரம்பித்து விடுகிறான்.  பெரிய மாலை போடுபவனுக்கு உதவி, சிறிய மாலை போடுபவனுக்கு உதை என்கிற ரீதியில்  செயல்பட ஆரம்பித்து விடுகிறான்!

கடந்த ம.இ.கா. ஆட்சி காலத்தில் எண்ணிக்கையில் அடங்கா மாலைகளையும், பொன்னாடைகளையும் தலைவர்களுக்குப்  போட்டாகி விட்டது! ஆனால் எதுவும் நடக்கவில்லை! இந்த மாலைகளுக்கும், பொன்னாடைகளுக்கும் இந்தியர்களுக்கும் எட்டாம் பொருத்தம் என்று சொல்லலாம்! எத்தனை எத்தனை மாலைகளும், பொன்னாடைகளும்  இந்தத் தலைவர்களுக்கு நாம் போட்டிருப்போம்! எந்த நாயாவது இந்த சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட்டிருக்குமா!

இப்போது தான் இந்தச் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படும் ஒரு தலைவனைப் பார்க்கிறோம். என் இலக்கை அடையும் வரை எனக்கு மாலைகள் வேண்டாம், பொன்னாடைகள் வேண்டாம் என்று சொல்பவர் யார்? அவர் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. தனது இலக்கை அடையும் வரை அவர் கண்துஞ்சார்,  பசி நோக்கார், மெய்வருத்தார் பாரார், கருமமே கண்ணாயினர் என நாம் நம்பலாம். அந்த அளவுக்கு இந்த மக்கள் மீது பற்றும் பாசமும் உள்ளவர்.

பொன்னாடையும் வேண்டாம்! மலர்மாலையும் வேண்டாம்! சமுதாயம் சாதனையாக மாற வேண்டும்!

No comments:

Post a Comment