Wednesday 3 October 2018

ஹாடி மாற வேண்டும்...!

பாஸ் கட்சி த.லைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரு நல்ல மனிதர். நல்லவர் என்றால் நல்லவர் தான். அவர் திருடினார், லஞ்சம் வாங்கினார் என்றெல்லாம் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. ஒரு நல்ல அரசியல்வாதி.

சமயம் என்று வரும் போது அவரும் தடுமாறுகிறார். சமயத் துறையில் யாராக இருந்தாலும், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், தடுமாறத்தான் செய்வார்கள். காரணம் சமயம் என்னும் போது ஒரே ஒரு சமயத்தில் அவர்கள் நிபுணத்துவம் பெறலாமே தவிர இருக்கின்ற அனைத்து மதங்களிலும் அல்ல. நிபுணத்துவம் பெறலாமே தவிர புனிதத்துவம் பெற எந்த மனிதனாலும்  முடியாது! 

அன்வார் இப்ராகிம் தனது இடைத் தேர்தல் பரப்புரையை  போர்ட்டிக்சனில் உள்ள ஒரு சீக்கிய குர்துவாராவிலிருந்து (கோவில்) துவங்கினார். அது அவருடைய விருப்பம். அவர் ராசி பலன் பார்ப்பவர் அல்ல. நேரங்காலம் பார்ப்பவர் அல்ல. தனது சுய விருப்பத்தின் பேரில் எங்குத் தொடங்க விருப்பம் கொண்டாரோ அங்கிருந்து தொடங்கினார். 

இதனையே ஒரு பிரச்சனையாக  கையில் எடுத்துக் கொண்டு ஹாடி,  அன்வார் மேல் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்.  குர்துவாரா போவதே பாவம் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துவிட்டார்! அவர் பேசுவதைப் பார்க்கும் போது நமது நாட்டில் வேறு மதங்களே இல்லை என்று அவர் நினைக்கிறாரோ என்று நமக்கு ஐயம் ஏற்படத்தான் செய்கிறது. மற்றொன்று இஸ்லாமிய சமயம் என்று வரும் போது அன்வார் வெறும் 'வெள்ளிக்கிழமை'  இஸ்லாமியர் அல்லர். அவர் தனது இளம் வயதில் நாடெங்கும் சென்று இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி சமயச் சொற்பொழிவாற்றியவர். மார்க்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்.

அவரைப் பற்றி ஹாடி பேசுவதே அவருடைய தகுதிக்கு ஏற்புடையதல்ல. இந்த நாட்டில் இஸ்லாம் என்பது மற்ற மதங்களைப் போல  அதுவும் ஒரு மதம் தான் என்பதை ஹாடி உணர வேண்டும். இங்கு இந்து சமயம், கிறிஸ்துவ சமயம், பௌத்த சமயம், சீனர்களின் பாரம்பரிய சமயம் இன்னும் ஆழமாகப் போனால் பல சமயங்கள் உண்டு. இப்படி பல சமயங்கள் உள்ள நாட்டில் யாரும் எந்த வழிப்பாட்டுத் தலங்களுக்கும் போகலாம் வரலாம்!  இதனாலெல்லாம் ஒருவரின் சமய நம்பிக்கைகள் குறைந்து விடும் என்பது போன்று பேசுவது சரியல்ல என்பதே ஹாடிக்கு நாம் சொல்ல வரும் செய்தி. 

வழிபாட்டில் கலந்து கொள்வது வேறு. அதே சமயத்தில் அவர்களின் அழைப்பை ஏற்று மரியாதை செலுத்துவது வேறு. ஹாடி அதன் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹாடி தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது அவர் தகுதிக்கு ஏற்புடையது அல்ல.

அவர் மாற வேண்டும்! மாற்றிக்கொள்ள முடியாவிட்டால் மாறிக்கொள்ள  வேண்டும்!

No comments:

Post a Comment