Friday 12 October 2018

இந்தியர்கள் எத்தனை விழுக்காடு...?

நாளை, சனிக்கிழமை,  நடைபெறும்  போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு அன்வாருக்கு எந்த அளவில் இருக்கும்?  மிகப் பெரிய அளவில் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த மே மாதம் நடைப்பெற்ற நாட்டின் பொதுத் தேர்தலில் பக்காத்தான் அரசாங்கம் ஆட்சி அமைக்க இந்தியர்களின் பங்கு அதிகம் என்பதாகவே இன்றும் சொல்லப்படுகின்றது. குறைந்தபட்சம் இந்தியர்களின் வாக்கு எழுபது  விழுக்காட்டுக்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

இப்போது போர்ட்டிக்சன் நிலவரத்தைப் பார்ப்போம். பொதுவாகவே இந்தியர்களின் வாக்கு பக்காத்தானுக்கு அதிகம் விழும் என்பது தெரிந்தாலும் கடந்த பொதுத் தேர்தலை விட இப்போதைய நிலவரப்படி இன்னும் அதிகம் வாக்குகளை எதிர்ப்பார்க்க முடியும் என்பதே உண்மை.

போர்ட்டிக்சன் தொகுதி என்பது காலங்காலமாக ஒரு ம.இ.கா. நாடாளுமன்ற தொகுதி என்பது நமக்குத் தெரியும். இந்த முறை எந்த வித முன் அறிவிப்புமின்றி, ம.இ.கா.வுடன் கலந்து ஆலோசனை செய்யாமல், அம்னோ தான் போட்டியிடப் போவதாகக் கூறிவிட்டு, கடைசியில் அவர்களும் போட்டியிடாமல், ம.இகா.வுக்கும் விட்டுக் கொடுக்காமல், ஒரு சூழலை அம்னோ தலைமை உருவாக்கிவிட்டது. இது நிச்சயமாக ம.இ.கா. தரப்பில்  வரவேற்கப்படவில்லை. பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வியடைந்தும் அது இன்னும் இறுமாப்புடன் இருப்பதாகவே இந்திய வாக்களர்களை நினைக்கின்றனர்.

சரி இந்தத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிடவில்லை. அம்னோவும் போட்டியிடவில்லை. அதாவது பாரிசான் கட்சிகள் போட்டியிடவில்லை. இப்போது ம.இ.கா. இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? முன்னாள் மந்திரி பெசார் இசா அப்துல் சமாட் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் ஏகப்பட்ட ஊழல் வழக்குகளில் பங்குள்ளவர். எப்போது 'மாட்டுவார்' என்பது இன்னும் தெரியவில்லை!  அவரால் எந்தப் புன்ணியமும் இல்லை!

நமது கணிப்பின் படி ம.இ.கா.வினரும் அன்வாருக்குத் தான் வாக்களிப்பார்கள் என நம்பலாம்.  சமீபத்தில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சோதி நாதன் தனது பிரச்சாரத்தின் போது அதனையே கூறியிருந்தார். ஏகமாய் அன்வாரைப் புகழ்ந்து தள்ளினார். வருங்காலத்தில் அன்வார் பிரதமர் ஆவார் என்கிற முறையில் இந்தியர்களின் மேன்மைக்கு அன்வார் வெற்றி பெறுவது அவசியம்  என்பது மட்டும் அல்ல அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறுவதும் அவசியம்.

எனது கணிப்பின்படி இந்தியரில் 95 விழுக்காடு மக்கள் அன்வாருக்கே வாக்களிப்பார்கள் என்பது தான்! எப்படியோ நாளை மாலைக்குள் முடிவு வெளியாகி விடும். அது வரை பொறுத்திருப்போம்.

எத்தனை விழுக்காடு? 95 விழுக்காடு!
 

No comments:

Post a Comment