Sunday 21 October 2018

இரு தவணைகள் போதும்...?


பிரதமர், டாக்டர் மகாதிர், நல்லதொரு திட்டத்தை முன் மொழிந்திருக்கிறார். ஆமாம், பிரதமர் பதவியை வகிப்பவர்கள், மாநில முதலமைச்சர்கள் - இந்த இரு தரப்பினரும் இரண்டு தவணைகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என அவர் ஆலோசனைக் கூறியிருக்கிறார்.

யோசிக்க வேண்டிய கருத்து.  ஆனால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை! உலகில் எத்தனை நாடுகள் இந்த இரண்டு தவணைகள் மட்டும் திட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன? அதிகம் தெரியாவிட்டாலும் இப்போதைக்கு அமெரிக்காவும் இந்தோனேசியாவும் கடைப்பிடிக்கின்றன என்பதாகச் சொல்லப்படுகின்றது.

அதிக நாள் பதவியில் இருந்தால் அந்த நாட்டு மக்களுக்கு அதிகம் ஆபத்து ஏற்படும் என்பதை முன்னாள் பிரதமர் நஜிப் நிருபித்து விட்டார்! இரண்டு தவணைகள் என்பதை விட மிகக் குறுகிய காலத்திலேயே அவர் நாட்டு மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டு வந்து விட்டார். நாட்டையே ஒரு சூதாட்ட களமாக மாற்றி விட்டார்!

அதே சமயத்தில் கட்சி ரீதியில் பார்க்கும் போது ம.இ.கா. வை எடுத்துக் கொள்ளுவோம்.  மற்ற யாரையும் விட அதிக காலம் தலைவர் பதவியில் இருந்தவர் துன் சாமிவேலு. அவர் பதவியை விட்டுப் போகும் போது ம.இ.கா. வை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியர்களையும் சுடுகாட்டுக்கு வழி காட்டிவிட்டுப் போனார்!  அந்த தரித்திரம் நமது சரித்திரம் ஆகிவிட்டது! இப்போது அதனை சரி பண்ணுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை! 

இந்த இரண்டு  தவணைகள்  என்னும்  போது நாம்  அமெரிக்காவைத்  தான் சான்றுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று உலகிலேயே எல்லாவகையிலும்  உயர்ந்த, செழிப்பான, வளர்ந்த  நாடு என்றால் அது  அமெரிக்காதான்.  உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக்கா தான். அந்த நாட்டில் ஊழல்,  லஞ்சம் என்னும் வார்த்தைகள் எல்லாம் அவர்களது  அகாராதியில் தான் பார்க்க  முடியும். அப்படி  ஏதேனும்  தவறுகள் நடந்தால் இருக்கவே  இருக்கிறது  நீதிமன்றம். அங்கு தான் அவர்களின் பிரச்சனைகளைத்  தீர்த்துக் கொள்ள வேண்டும். எப்பேர் பட்ட கொம்பனாக இருந்தாலும் அவன்  நீதிமன்றத்துக்குத் தான் போக வேண்டும்!

மேலும் இரண்டு தவணைகள்  முடிந்து  புதிதாக  வருபவர் புதிய  சிந்தனைகளையும், புதிய ஆற்றல்களையும் கொண்டு  வருவார்  என  எதிர்பார்க்கலாம். அனைத்தும்  மக்களின் நலனுக்காக அவரது  ஆற்றலைப் பயன்படுத்துவார்.  தொடர்ந்தாற் போல அவர் பதவியில்  இருந்தாரானால் ஊழல் செய்ய நேரிடும்! குடும்பத்திற்காக கோடிகளைச் சேர்க்க வேண்டி வரும். அதைத்தான் நாம்  கண்கூடாக பார்க்கிறோம்.

ஊழலை நாம் தவிர்க்க வேண்டுமானால் இரண்டு தவணைகள்  என்பதே சிறந்தது. அவர்களுடைய பதவி காலத்தில்  நல்லவைகள் நடக்கும். மக்களுக்கு நல்லது நடக்கும். ஊழல் தவிர்க்கப்படும்.

ஆக, இரண்டு தவணைகள் என்பதை ஆதரிப்போம். அது மாநிலமாக இருந்தாலும் சரி, நடுவண் அரசாங்கமாக இருந்தாலும் சரி இரண்டு தவணைகள் என்பதே சரியானதாக இருக்கும்!

No comments:

Post a Comment