Sunday 21 October 2018

குழாய் நீர் தூய்மையானதா...?

நீர், நிலம், இயற்கை வளங்கள் அமைச்சர்,  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  நேரடியாக குழாயிலிருந்து வரும் தண்ணீர்  குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்கிறார். அது மட்டும் அல்ல, அந்தக் குழாய் நீரைத்தான் தானும் குடிப்பதாகச் சொல்லுகிறார். அப்படியென்றால் அவர் வீட்டாரும் குழாய் நீரைத் தான் குடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் ஜெயகுமாருக்கு ஆதரவாக ஸ்பேன் என்கின்ற தேசிய நீர் சேவை ஆணையமும் அதனையே உறுதிபடுத்தியிருக்கிறது. அதாவது நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் போது அது குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்று அவர்களும் அதனையே சொல்லுகின்றனர்.

நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை.  டாக்டர் ஜெயக்குமார்,  தான் நேரடி  குழாய் நீரைக் குடிப்பதாகக் கூறியிருக்கிறார்.   ஆணையம் அது பாதுகாப்பான நீர் என்று சொன்னாலும் அங்கு உள்ளவர்கள் யாரும் குழாய் நீரைக் குடிப்போம் என்று சொல்லவில்லை.

நாம் பள்ளியில் படிக்கும் போதே தண்ணீரைக் கொதிக்க வைத்துத் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படித்தான் நம்மில் பல பேர் கொதிக்க வைத்த நீரைக் குடித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் சொல்லும் முன்பே துணை சுகாதார அமைச்சர் ஓர் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.  நீர் சுத்தமாக இருக்கலாம். ஆனால் குழாய் வழியே போகும் அந்த நீர் எத்தனை இடர்பாடுகளைக் கடந்து செல்லுகிறது என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். துரு பிடித்த குழாய்கள் தான் நமக்கு வில்லன்!  எத்தனை ஆண்டு குழாய்கள் இவை என்று யாருக்குத் தெரியும்? வெள்ளைக்காரன் காலத்து குழாய்கள் எல்லாம் இன்னும் பயன்பாட்டில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  எத்தனை ஆண்டு கால துருக்கள் இந்த குழாய்களில் துளிர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? இந்த நிலையில் சுத்திகரிப்பு நீர் என்றால் மட்டும் போதுமா? சுத்திகரிப்பு நிலையம் நமது வீட்டுப் பக்கத்திலா இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் சுத்திகரிப்பு நீர் முதலில் துருக்களின் தாகத்தைத் தணித்த பின்பு தான் அது மக்களுக்குப் போய்ச் சேருகிறது! அதனைத் தான் சுகாதார துணை அமைச்சர் அது மாசு படிந்த நீர் என்கிறார். 

நீர், நில அமைச்சர் மக்களைக் குழப்பக் கூடாது. கறை படிந்த நீரை "நான் பருகுகிறேன்" என்று சொல்லி மக்களை நோயுள்ளவர்களாக மாற்ற நினைக்கக் கூடாது.  அவர் சொல்லுவதில் உண்மை இருந்தாலும் கறை படிந்த குழாய்களையும் அவர் மறந்து விடக் கூடாது.

பதவியில் இருப்பவர்கள் பேசும் போது மிகக் கவனமாகப் பேச வேண்டும். அவர் சொலவதை என்னைப் போன்றவர்கள் பின் பற்றப் போவதில்லை. ஆனால் அவர் சொல்லுவதை உண்மை தான் என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கலாம், அல்லவா!

No comments:

Post a Comment