Friday 19 October 2018

தாய்க் கட்சியா...?

ம.இ.கா. வை மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சி என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறது. அதுவும் ம.இ.கா.காரன் சொன்னால் இன்னும் கோபம் வருகிறது.

ம.இ.கா.வின் சாதனை என்ன? ஒவ்வொரு மலேசிய இந்தியனையும் கோவனத்தோடு நிற்க வைத்தது தான் அவர்களின்  சாதனை! ஏதாவது ஒன்றில்  நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று அவர்களால் காட்ட முடியுமா?

ம.இ.கா.அரசியலுக்கு எப்போது குண்டர் கும்பல் கலாச்சாரம் நுழைந்ததோ அந்த ஒன்றில் மட்டும் தான் ம.இ.கா. வெற்றி பெற்றிருக்கிறது! இது நாள் வரை அந்தக் குண்டர் கும்பலை ஒழிக்க முடியவில்லை. காவல் துறையும் கூட தடுமாறுகிறது! குண்டர் கும்பலைத்தான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் சிறந்த முறையும் வளர்த்து எடுத்திருக்கிறார்கள்! அதனைத்தான் ம.இ.கா.வின் பெரிய சாதனை! பிற இனத்தவர்களால் எட்ட முடியாத சாதனை! 

இன்று நாம் வாழ்கின்ற இந்த சொந்த நாட்டில் எத்தனை பிரச்சனைகளோடு நாம் வாழ்கிறோம். எத்தனை உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம்.

இங்குப் பிறந்தவனுக்கு அடையாளக்கார்டு இல்லை; குடியுரிமை இல்லை. நாடற்றவன் என்னும் அடைமொழி வேறு. இங்குப் பிறந்த பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அப்படியே படித்து வெற்றி பெற்றால் பல்கலைக்கழகம் போக முடியவில்லை. அப்படியே அவன் பட்டதாரியானால்  அவனுக்கு வேலை கொடுக்க யாரும் தயாராய் இல்லை. அப்படியே அவனுக்கு வேலை கொடுத்தாலும் மற்ற இனத்தவரை விட குறைவான சம்பளம். 

இந்த சமூகத்தை இப்படி ஒரு கடை நிலைக்குக் கொண்டு செல்ல பாதை அமைத்துக் கொடுத்தது யார்? அது ம.இ.கா. என்கிற இந்த தாய்க் கட்சி தானே! ஒரு வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்டு சேவை மனப்பான்மையோடு  ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி கடைசியில் சேவையை சேலையாக நினைத்தவர்களிடம் கட்சி அகப்பட்டு இந்த இனத்தையே சின்னாப்பின்னமாக ஆக்கி விட்டதே, அப்புறம் என்ன தாய்க்கட்சி?

ம.இ.கா. மீண்டும் தலை தூக்குமா?  தேர்தல் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன? ஏதோ கட்சியில் இருப்பதை நாலு பேரும் பங்கிட்டு கடைசியில் ஒன்றுமில்லை என்று ஒப்பாரி வைக்கட்டும்! 

இந்தியனைத் தூக்கி நிறுத்துகிறோம் என்று எவனாவது  சொன்னால் அவனை.........! நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்!


No comments:

Post a Comment