Thursday 4 October 2018

இது தாண்டா போலிஸ்....!

சில சமயங்களில் நமது காவல்துறையின் செயல்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன!   அவர்களைக் குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு நம்மைப் பேச வைக்கின்றன!

கடைசியாக பத்திரிக்கைகளில் அமர்க்களப்பட்ட ஒரு செய்தி. சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஏழு மாதங்களாக தங்கி இருந்திருக்கிறார்!  குடும்பம் நடத்தவில்லை என்பதைத் தவிர மற்றபடி விமான நிலையமே அவரது வீடாக இருந்திருக்கிறது! 

ஆனாலும் ஏழு மாதங்களாக அவர் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் - குறிப்பாக காவல்துறையினரின் கண்களுக்கு அகப்படாமல் - அவரால் எப்படி தொடர்ந்தாற் போல ஏழு மாதங்களாக இருக்க முடிந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

இப்போது யாரை நாம் பாராட்டலாம்?  ஏழு மாதங்களாக அனுமதியின்றி இருந்த ஒர் அயல்நாட்டவரை கண்டு பிடிக்காத காவல்துறையை நாம் பாராட்டவோ, சீராட்டவோ முடியாது! ஒன்றைச் சொல்லலாம். இது காவல்துறையே அல்ல!  நாட்டிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவினாலும் கூட இவர்களால் கண்டு பிடிக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். இது காவல்துறையினரின் அலட்சியமா அல்லது இது தான் அவர்களின் இயல்பா?  கடந்த காலங்களில் இவர்களின் சேவை இப்படித்தான் அமைந்திருக்கும் என்பதை இப்போது நாம் அணுமானிக்கலாம்!

ஒரு நாட்டின் விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை நாம் அறிவோம். இப்போது ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே நமது அண்டை நாடான சிங்கப்பூரில் நடக்கும் சாத்தியம் உண்டா? இங்கு அந்த சாத்தியம் உண்டு என அறியும் போது "என்னடா காவல்துறை?" என்று நாமும் சலித்துக் கொள்ள வேண்டி உள்ளது.வேறு என்ன செய்ய?

எல்லாம் முடிந்த பிறகு 14 நாள் தடுப்புக் காவல், 10,000 வெள்ளி அபராதம், ஐந்தாண்டு சிறை, பிரம்படி என்று சொல்லிக் கொண்டிருப்பதில் யாருக்கும் எந்தப் புண்ணியமும் இல்லை. இதெல்லாம் நடக்கும் முன்பே  அந்த இளைஞர் அவர் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

இதுவா போலிஸ்...!

No comments:

Post a Comment