அது ஒரு தனி கட்சியாக அரசாங்கத்தில் இடம் பெறாத கட்சியாக இருந்தால் அது பற்றி யாரு கவலைப்படப் போவதில்லை. அது அவர்களுடைய பாடு என்று விட்டு விடலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை.
இருக்கின்ற அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பெர்சாத்துவில் சேர்வதில் தவறு இல்லை. அம்னோவே ஒன்றுமில்லாமல் போனாலும் தவறில்லை. ஆனால் அங்கிருந்து பெர்சாத்துவில் சேர்ந்து அவர்கள் அமைச்சர்களானால் அது சரியாகப்படவில்லை. அவர்கள் பழைய அம்னோ அமைச்சர்கள் என்பதால் அவர்களுக்குப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்த நீதியும் இல்லை.
அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும் அவர்கள் கடந்த காலங்களில் செய்த ஊழல்கள் அனைத்தையும் மறைப்பதும் சரியான செயலாகப்படவில்லை.
பெர்சாத்துவில் சேர்பவர்கள் சேரட்டும். அதில் நமக்கு ஒன்றும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தப் பதவியும் - குறிப்பாக எந்த அமைச்சர் பதவியும் - கொடுக்கக் கூடாது என்பதில் பெர்சாத்துவே கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சாதாரண உறுப்பினர்களாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யட்டும். அதனை நாம் வரவேற்போம். சேவை செய்யத் தானே அவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், அதனால் அவர்கள் அமைச்சர் பதவியை ஏற்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கது தானே!
அதோடு மட்டும் அல்ல. அவர்கள் அனைவருமே ஊழல் புரிந்தவர்கள் அல்லர் என்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து நற்சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். இது விளையாட்டுத் தனமான காரியம் அல்ல. காரணம் அம்னோ என்றாலே எம்மருங்கிலும் ஊழல் என்றாகிவிட்டது! அக்கட்சியை அப்படியெல்லாம் நம்பிவிட முடியாது.
நாம் சொல்ல வருவதெல்லாம் அம்னோ கட்சியினரை வரவேற்பதில் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். அவர்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள், எத்தனை பெண்டாட்டி பிள்ளைகள், எத்தனை பாலியல் பின்னணிகள் அனைத்தும் ஆராய்ந்த பின்னரே அவர்கள் பெர்சாத்துவில் இணைக்கப்பட வேண்டும், அதுவும் சாதாரண உறுப்பினராக!
துங்கு ரசாலி சொல்லுவது போல "கோழிக்கூண்டுக்கள் நரியை விடுவது போல!"
No comments:
Post a Comment