Friday 12 October 2018

தீபாவளி சந்தை

தீபாவளி சந்தை என்னும் போது கடந்த காலங்களில் நடந்த பல விரும்பத் தகாத சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.

எல்லா விஷயங்களிலும் ஒதுங்கி நிற்கும் ம.இ.கா. வினர் இந்தத் தீபாவளி சந்தையில் மட்டும் ஓடி வந்து நமது வியாபாரிகளுக்கு உபத்தரவமாக இருப்பார்கள்! அவர்களால் செய்ய முடிந்தது உபத்தரவம் மட்டும் தான். ஏதோ கொஞ்சம் பணம் பண்ணலாம் என்னும் அற்ப ஆசை!

இந்த அற்ப ஆசையால் வரும் விபரீதங்கள்என்ன? சந்தை கடைகளின் வாடகையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துவது. உள்ளூர் வியாபாரிகள் 'கட்டுப்படியாகாது' என்று முணகினால் உடனே வெளி நாட்டவருக்கு தாராளமாகக் கடைகளைக் கொடுத்து உதவுவது!  இந்த ம.இ.கா. வினருக்கு மிகவும் துணையாக இருப்பவர்கள் அரசாங்க அதிகாரிகள்.  அவர்களுடைய அதிகாரம் தூள் பறக்கும்! இவர்களோடு சேர்ந்து கொண்டு வியாபாரிகளிடையே  போட்டா போட்டி! இதைவிட வியாபாரத்திற்குச் சம்பந்தமே இல்லாதவன் கடைகளை வாங்கி வெளி நாட்டவனுக்கு அதிக வாடகைக்குக் கொடுப்பது!  ஒரு தமிழன் வியாபாரம் செய்வதற்கு அவனைச் சுற்றி எத்தனை பொறுக்கித் தின்னும் நாய்கள்! நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...!

சிரம்பானில் போன ஆண்டு ம.இ.கா.வும தமிழ் இளைஞர் மணிமன்றமும் இந்த தீபாவளி சந்தைக்காக முஷ்டியை உயர்த்திக்  கொண்டனர்! தொண்டு என்று வரும் போது முகத்தை  முக்காடிட்டு ஓடுபவர்கள் துட்டு என்று வரும் போது துள்ளி விளையாடுகின்ற்னார்!

ஆனால் இன்றைய நிலை என்ன?  இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது என நம்பலாம். காரணம் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமே கடைகள் கொடுக்கப்படும். இனி வெளி நாட்டவருக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பில்லை. வாடகைகளும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். இலஞ்சம் பற்றியெல்லாம் பேச ஒன்றுமில்லை.  அதிகாரம் பண்ணியவர்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. அவர்கள் போய் விட்டார்கள்.

இப்போது மக்கள் மிகக் கவனத்துடன் இருக்கிறார்கள். அதிகார அத்து  மீறல் என்றால்  உடனடியாக அதிகாரத்தில்  உள்ளவர்களுக்குச் செய்திகள்  போய் விடுகின்றன.  இலஞ்சம்  வாங்குபவர்களைப் பற்றி  காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. யாரும் யாரையும் எதிர்ப்பார்ப்பதில்லை. உடனடியாக குற்றச்சாட்டுக்கள் பொது மக்களிடமிருந்து  எழுப்பபடுகின்றன. 

அதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். புதிய அரசாங்கம் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த ஆண்டு  தீபாவளி சந்தையில்  கடை எடுத்தவர்கள் லாபம் பார்க்கட்டும், அரசியவாதிகளின் பிக்கல் பிடுங்கல் இருக்காது என நம்பலாம். 

வியாபாரிகள் வெற்றி பெறட்டும்! வாழ்த்துவோம்!



 

No comments:

Post a Comment