Sunday 2 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (34)

நாணயம் மனிதனுக்கு அவசியம்! 

இது ஒரு பழைய சினிமா பாடல்  கவிஞர் காமாட்சி சுந்தரம் எழுதிய பாடல்.  இந்தப் பாடலில் வரும் ஒரு நாணயத்தை விட்டுவிடுவோம். 

நாம் இங்கு  பார்க்கும் நாணயம் என்பது நேர்மை மட்டுமே.

தொழில் சார்ந்து வாழ்பவர்களுக்கு எந்த அளவுக்கு நேர்மை தேவை என்பதை முன்பே எழுதியிருக்கிறேன். ஆனாலும் நம்மைச் சுற்றி பார்க்கும் போது எந்த ஒரு வியாபாரியும் நேர்மையோ, நாணயத்தையோ பார்ப்பதாகத் தெரியவில்லை என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது!

உண்மை தான். அதற்காக  வியாபாரிகள் அனைவரும் நாணயமற்றவர்கள் என்னும் எண்ணத்தை நாம் கை விட வேண்டும்.

நாணயம் அல்லாத வியாபாரிகளை மக்கள் நம்புவதில்லை.  ஒருமுறை ஒருவர் நம்மை ஏமற்றினால் அடுத்து முறை நாம் அந்த வியாபாரியிடம் போகப்போவதில்லை என்று நாம் உறுதியாக இருப்போம்.  அப்படித்தான் நாம் நடந்து கொள்ளுகிறோம்.  ஒருவர் ஒருமுறை ஏமாற்றலாம்.பலமுறை ஏமாற்றுவது என்பது இயலாத காரியம். 

நான் பலமுறை பலரிடம் ஏமாந்திருக்கிறேன்.  அத்தோடு சரி. மீண்டும் அந்த பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.

வியாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் நாணயமற்றவர்கள் என்று நினைப்பது தவறு.  அப்படி இருக்கவும் முடியாது.  ஒருமுறை தானே ஏமாற்ற முடியும். அப்புறம்? ஒரு வாடிக்கையாளரை எத்தனை முறை ஏமாற்ற முடியும்?

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நாணயமற்ற முறையில் தொழிலில் ஈடுபடுபவர்கள் பின்னர் தோல்வி தான் அடைவர். அதாவது அவர்கள் நினைத்தவை எதனையும் அவர்கள் அடையாமல் போய்விடுவர்.   நாணயம் அற்றவர் என்றால் அது திருட்டுத்தனத்திற்குச் சமம்.

ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் "சீனர்கள் தோல்வி அடைவதில்லையே!"  என்று  நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது உண்மை அல்ல. அவர்கள் எங்கே தோல்வி அடைகிறார்கள் என்று நமக்குத் தெரிவதில்லை! அவ்வளவு தான். நம் கண்களுக்கு அது பளிச்சென்று தெரியவில்லை.

கவிஞர் சொன்னது போல நாணயம் மனிதனுக்கு மிகவும் அவசியம். அதுவும் தொழில் செய்வோருக்கு இன்னும் அதிகம் அவசியம். நாணயத்தைக் கெடுத்து உங்கள் தொழிலையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

நாணயம் மிகவும் அவசியம்!

No comments:

Post a Comment