இந்த நிமிடமே உகந்த நேரம்!
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் எதனையும் தள்ளிப் போடாதீர்கள். இது தான் நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
இன்றைய வேலைகள் இன்றே செய்யப் பழக வேண்டும். நாளை வேண்டாம். அடுத்த நிமிடம் நாம் இருப்போமா, இருக்கமாட்டோமா என்னும் நிலையில் இருக்கும் நமக்கு "நாளை, அப்புறம், அடுத்த வாரம்" என்று தள்ளிப் போடுவதால் பெரும் குற்றம் செய்கிறோம்.
இந்த நிமிடம் நாம் இருப்பது உறுதி. அதனால் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் அல்லது இதனைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.
காலையில் வேலைக்குப் போகிறோம். போனதும் இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று ஒரு பட்டியல் போட வேண்டும். உடனடியாக செய்ய வேண்டிய வேலை அடுத்து முதலாவது, இரண்டாவது என்று அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து வேலைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு நமக்குத் தேவையான் பொருள்கள் என்ன, எங்கே போய் வாங்க வேண்டும், காலையிலா மாலையிலா, பொருள்களை நேரடியாக நமது கடைகளைக்கே கொண்டு வருவார்களா, என்ன என்ன பொருள்களை வாங்க வேண்டும் என்று முன்னமையே தீர்மானித்து விட்டால் நமக்கு வேலை சுலபமாகிவிடும். இல்லாவிட்டால் "அது இல்லை! இது இல்லை!" என்று கடைசி நேரத்தில் அலை மோதிக் கொண்டு இருக்க வேண்டி வரும்!
நாம் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய நினைக்கிறோம். கடைசியில் எந்த வேலையையும் செய்து முடிக்காமல் தடுமாறுகிறோம்! அது நம்முடைய தவறு.
நமது கடையில் என்ன பொருள்கள் தேவை என்பதை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் நமது பொருள்களை வெளியே சென்று தான் வாங்கி வருகிறோம். அதனால் ஒரு முறை போகும்போது நமது தேவைக்கு ஏற்ப அனைத்தையும் வாங்கி விடலாம்.
தொழிலில் உள்ளவர்களுக்கு இன்னும் பல சிக்கல்கள் உண்டு. பணத்தைப் போட வேண்டும், எடுக்க வேண்டும், கடனை அடைக்க வேண்டும், காசோலைகளை வெளியாக்க வேண்டும் என்று இப்படி பல நெருக்கடிகள் உண்டு.
அதனால் நீங்கள் நிதானத்தோடு செயல்பட வேண்டிய சூழல் வேண்டும். நிதானம் என்கிற போது ஒவ்வொன்றையும் குறித்து வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் பல வேலைகளினால் மறந்து போகும் சூழல் உண்டு. அதன் மூலம் நமக்கு நட்டம் ஏற்பட வாய்ப்பும் உண்டு.
தினசரி எழுதி வைத்துக் கொண்டு, குறித்து வைத்துக் கொண்டு செயல்படும் வழக்கத்தை மேற் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்குத் தெரியும் உங்களின் தினசரி நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது.
தனது பணிகளைத் தினசரி எழுதி வைத்துச் செயல்படுபவன் எப்போதுமே வளர்ச்சியை நோக்கியே பயணிப்பான்!
இந்த நிமிடம், இந்த கணம் உண்மையானது! அனுபவியுங்கள்!
No comments:
Post a Comment