Saturday 15 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (47)

இருக்கவே இருக்கிறது நேரடித் தொழில்!

பயப்படாதீர்கள்! நாட்டில் பிழைப்பதற்கு நிறையவே வழிகள் இருக்கின்றன.  நாம் ஒரே வேலையில் பல ஆண்டுகளைக் கழித்து விட்டதால் தீடீரென வேலை பறிபோனதும் என்ன செய்வது என்று திசை தெரியாமல் தடுமாறுகிறோம். இது இப்போது மட்டும் அல்ல அந்தக் காலத்திலும் அப்படித்தான் இருந்தது! அதிசயம் ஒன்றுமில்லை!

ஆனால் அதிசயம் என்ன வென்றால் அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டும் எழுவது தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

போட்டி நிறைந்த இந்த உலகில் வாழ்வதற்கு நம்பிக்கை மிகவும் தேவை. இந்த வேலை போனால் இன்னொரு வேலை. நாம் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.  எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

இது நாள் வளர்ந்த பாதையை விட்டு புதிய பாதையைத் தேர்ந்தெடுங்கள். மனிதனுக்கு மாற்றம் தேவை. அது இப்போது வந்திருக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளுங்கள்.  கலங்கினால் பாதை கலங்கலாகத் தான் இருக்கும்.  பாதை தடுமாறும்.

நண்பர் ஒருவருக்கு சிவப்பு அடையாளக்கார்டு வைத்திருந்ததினால் அவர் பார்த்து வந்த வேலை பறி போனது. காப்புறுதி தொழிலுக்கு ஒருவர் வழி காட்டினார். அவ்வளவு தான். சிக்கென பிடித்துக் கொண்டார். வயதான காலத்தில் பல இலட்சங்களுக்கு அதிபதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் தொடர்ந்து படிப்பதற்குப் பொருளாதார பிரச்சனை எழுந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருள்களை விற்கும் ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டு தனது கல்வியை முடித்தது மட்டும் அல்லாமல் அவன் படித்த படிப்புக்கு நேர்மாறாக அவனை வாழ வைத்த அந்த நேரடித் தொழிலேயே தொடர்ந்து விட்டான். இப்போது பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருக்கிறான். 

இன்னொரு மனிதர் அவர் குடும்பத்தையே நேரடித்தொழிலில் மூலமே நடத்தியவர். ஒரு மகள் வெளி நாட்டில் டாக்டராக இருக்கிறார். மற்றவர்கள் உள்நாட்டிலேயே நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.


என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஏதோ ஒரு வேலையைச் செய்து மாதச் சம்பளம் வாங்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற ஒரு நிலைப்பாட்டை காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். அதனால் தான் வேலை பறி போனதும் நாம் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. உடனடியாக எந்த மாற்றத்திக்கும் நாம் தயாராக இல்லை.

எது நடந்தாலும் எந்த மாற்றத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்! இந்த உலகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும்.  இந்த நாட்டில் பல இலட்சம் வெளி நாட்டினர் வந்து இங்கு பிழைக்கின்றனர்.  பலர் சொந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நம்மால் மட்டும் முடியாதா, என்ன? 

நேரடித் தொழில்கள் நிறையவே இங்கு இருக்கின்றன. ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வரும் வழியைப் பார்ப்போம்! பின்னுக்குப் போவதைப் பற்றியான சிந்தனை வேண்டாம்!  முன் நோக்கிப் போகும் பாதை எட்டும் தூரத்தில் தான்  இருக்கிறது! பயான் படுத்திக் கொள்ளுங்கள்!

அதான்!  எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது நேரடித்தொழில்!

No comments:

Post a Comment