ஆங்கிலம் வரவில்லையா?
இன்றைய நிலையில் படித்தவர்கள் அதிகம். படிக்க வசதிகள் அதிகம். எல்லாமே இருக்கிறது.
ஆனால் ஆங்கிலம் பேச வரவில்லை என்கிறார்கள்!
நமக்குத் தெரிந்த வரை அவர்கள் அனைவரும் கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது பெரிய குறைபாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலம் தெரியாதது பெரிய குற்றம் இல்லை. அதற்கு நாம் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டும். புதிதாக எந்த வழியும் கண்டு பிடிக்கப்படவில்லை!
நான் தோட்டத்தில் வேலை செய்த காலத்தில் ஒரு சீன இளைஞர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார், அவர் முழுமையாக சீனப்பள்ளியில் கல்வி கற்றவர். ஆங்கிலம் வராது! ஆனால் ஆங்கிலத்தை வர வைத்துக் கொண்டார். அவருக்கு என்ன ஆங்கிலம் வருமோ அப்படியோ பேசுவார்! எதற்கும் கவலைப்படுவதில்லை! கேலி, கிண்டல்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை! சுமார் ஆறு மாதங்களில் ஆங்கிலத்தை சரளமாக பேசக் கற்றுக் கொண்டார். அவர் முறையாக சீன வழி கல்வி கற்றவர். ஆங்கிலமும் அங்குக் கற்றுத் தரப்படுகின்றது. ஆங்கிலம் பேச வரவில்லை என்பதைத் தவிர பேச முடியாதவர் அல்ல! முன்பு அந்த வாய்ப்பு இல்லை.வெளி உலகில் அந்த வாய்ப்புக் கிடைத்தது.பயன்படுத்திக் கொண்டார்.
இதற்கு என்ன தேவை? கொஞ்சம் முயற்சி தேவை.அவ்வளவு தான். என்ன தான் நாம் மலாய் மொழி வழி கல்வி கற்றாலும் அங்கு ஆங்கிலமும் கற்றுத் தரப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் ஆங்கில மொழி நமக்குப் புதிய மொழி அல்ல. எப்போதுமே நமது நாட்டில் புழக்கத்தில் உள்ள ஒரு மொழி. மேலும் ஆங்கில மொழியை நூறு விழுக்காடு சரியாகப் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்றுமில்லை. வெள்ளைக்காரன் கூட அப்படிப் பேசுவதில்லை! தமிழை நாம் என்ன சரியாகத்தான் பேசுகிறோமா? அப்படித்தான் அவர்களும்!
ஆங்கிலம் பேச வராது என்று சொல்லுபவர்களில் இந்திய மாணவர்களும், மலாய் மாணவர்களும் தான் முன்னணியில் நிற்கிறார்கள். பேச வேண்டும், ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை. கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஒரு சினிமா படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்தால் எளிதாக ஆங்கிலம் பேசி விடலாம்.
இது உங்கள் வயிற்றுப் பிரச்சனை. அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சுப்பர் ஸ்டார், தல, தளபதி இவர்களெல்லாம் அவர்கள் குடும்பத்தின் வயிற்றுப் பிரச்சனையைப் போக்கத்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் அதனைத் தான் செய்ய வேண்டும்.
ஆங்கிலம் வருமா? வரும்! ஆனா.........வேண்டாம்!
No comments:
Post a Comment