Friday 21 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (53)

ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்

நமது அன்றாட வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கிறோம்.ஒரு நாள் மகிழ்ச்சி. ஒரு நாள் சோகம்.  வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி இருந்தால்  அது சுவைக்காது. அதனால் தான் நமக்கு இந்த ஏற்றம் இறக்கம் தேவைப்படுகிறது.

அது போலத் தான் வியாபாரத் துறையிலும். நாம் எதிர்பாராத நேரத்தில் ஏதாவது இறக்கங்கள் வந்து விடுகின்றன.  ஏற்றம் இருக்கும் போது மகிழ்கிறோம். இறக்கம் ஏற்படும் போது ஒன்று துண்டைக் காணோம் துணியைக் காணோம்  என்று ஓடி விடுகிறோம்! அல்லது 'இனி எப்படி?' என்ற கேள்விக் குறியுடன் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறோம்! இது தான் யதார்த்தம்!

இப்போது நம்மிடையே "கோவிட் 18" என்னும் தொற்று நோய் , நம் நாடு மட்டும் அல்ல உலகங்கிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. நிறைய மரணங்கள்.  உலகமே திகைத்துக் கொண்டிருக்கிறது.

இதனிடையே ஒரு சாரார் மகிழ்ச்சியால் துள்ளுகின்றனர். ஆமாம் மருந்தகங்கள், முகக்கவசங்களை விற்கும் நிறுவனங்கள் தங்களது கல்லாப் பெட்டிகளை நிரப்புகின்றன. விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், உணவகங்கள் என்று இன்னும் சில நிறுவனங்கள் கதறுகின்றன.  இந்த நஷ்டத்தின் மூலம் பல மரணங்களும் சம்பவித்திருக்கலாம். பலர் வேலை வாய்ப்புக்களையும் இழந்திருக்கலாம்.

என்ன செய்யலாம்? இழப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். வேறு வழியில்லை! 

தொழில் ஏற்றம் அடைந்திருந்த போது நாம் அதிக மகிழ்ச்சியடைந்தோம். அந்த மகிழ்ச்சியை இப்போது இந்த துயரத்தின் போது பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவ்வளவு தான்.

வாழ்க்கை என்பது இது தான்.சோதனை, வேதனை, சாதனை என்று போய்க் கொண்டே இருக்கும். நாமும் "இதுவும் கடந்து போகும்!" என்கிற மனநிலையில்  அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். 

ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அஞ்சாதீர்கள்.  எதுவும் நிரந்தரமல்ல.  அதுவும் தொழில் துறைகளில் ஒரு நிலையான வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு நாள் குறைந்தால் ஒரு நாள்அதிகரிக்கும், ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போகும், அடுத்த நாள் கொடிகட்டிப் பறக்கும்! இது வியாபாரத் துறை.  அப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் காரணகாரியங்கள் உண்டு. அதனை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஆக, வருமானம் குறைகிறதே என்று அஞ்சாதீர்கள். நமக்கு இது புதிய அனுபவமாக இருக்கலாம். வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீனர்கள் அப்படித்தான் தங்களது ஒவ்வொரு நாளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்?

ஏற்றத் தாழ்வுகள் வரும் போகும்!  இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் வையுங்கள்.

No comments:

Post a Comment