Wednesday 12 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (44)

யார் பின்னாலும் அலையாதீர்கள்!

யாரும் என்று சொன்னாலும் நான் சொல்ல வந்தது அரசியல்வாதிகள் பின்னால் அலையாதீர்கள் என்பது தான். 

அரசியல்வாதிகள் அடிப்படையில் 
சுயநலவாதிகள்.  அவர்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவார்களே தவிர எந்தவகையிலும் அவர்கள் உங்களை உயர்த்திவிட மாட்டார்கள்! தங்களை உயர்த்திக் கொள்ளுவதறகு உங்களை அவர்கள் ஏணியாகப் பயன்படுத்திக் கொள்ளுவார்களே தவிர கடைசியில் உங்களுக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் எலும்புத் துண்டுகள் தான்!

முன்னேற வேண்டும் என்று முனைப்பு உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் அலையாதீர்கள்.  ஓர் அரசியல்வாதியின் பின்னால் வால்பிடித்துக் கொண்டு திரிந்த ஓர் இளைஞனைத் தெரியும். எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்றவன். ஆசிரியராக ஆகியிருக்கலாம். அரசாங்க வேலைக்குப் போயிருக்கலாம். அந்த அரசியல்வாதி நினைத்திருந்தால் அந்த வாய்ப்புக்களை அவனுக்குக் கிடைக்க வைத்திருக்கலாம். ஆனால் அந்த அரசியல்வாதி அதனைச் செய்யவில்லை. அவர் கூடவே போவதும் வருவதும் அவருக்கு ஆதரவாகப் பேசுவதும், இரவு ஆனால் 'தண்ணி' அடிப்பதும் அதுவே அவனது வாழ்க்கையாகப் போய்விட்டது! அந்த இளைஞன் கடைசிவரை வேலை செய்து சம்பாதித்தோம், குடும்பத்தைக் காப்பாற்றினோம் என்கிற எண்ணமே ஏற்படாதவாறு அந்த அரசியல்வாதி அவனைப் பார்த்துக் கொண்டார்! கடைசியில் 'தண்ணி' அடிக்க வழியில்லாமல் நொந்து நூலாகிப் போனான்!

இது என்ன வாழ்க்கை? இந்த சுயநலமிகளை நம்பியா நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவது! ஒர் அரசியல்வாதி முன்னேறினான் என்றால் ஒரு கொள்ளைக்காரன் உருவாகிவிட்டான் என்பது தான் பொருள்! ஒரு கொள்ளைக்கரனுக்கு உதவுவதில் நமக்கு என்ன பெருமை! 

நமது வாழ்க்கையைப் பொறுத்தவரை நமது குடும்பத்திற்கே முதலிடம். குடும்ப முன்னேற்றத்திற்கே முதலிடம். பிள்ளைகளின் கல்விக்கே முதலிடம். பொருளாதார முன்னேற்றத்திற்கே முதலிடம்.

நாம் யார் பின்னால் அலைந்தாலும் அது நமது முன்னேற்றத்திற்காகத் தான் இருக்க வேண்டுமே தவிர கொள்ளைக்காரர்களின் முன்னேற்றத்திற்காக அல்ல!

நமது குடும்ப முன்னேற்றதிற்காக பாடுபடுவது சுயநலம் அல்ல. அது  நமது கடமை. ஒவ்வொரு தமிழர் குடும்பமும் முன்னேறினால் அது போதும். வேறு எந்த வெங்காயமும் வேண்டாம்!  நாம் முன்னேறி விட்டோம் என்று அர்த்தம்.

அரசியல்வாதிகள், கொள்ளைக்காரர்கள் பின்னால் அலைவது  மாபெரும் குற்றம்!  அதனைச் செய்யாதீர்கள்!

No comments:

Post a Comment