இப்படியும் செய்யலாம்!
உணவகங்களைப் பற்றி எத்தனையோ குறைகள் சொன்னாலும் அது என்னவோ உணவகங்கள் குறைந்தபாடில்லை! வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன!
மலேசியர்களாகிய நாம் வீட்டு சாப்பாட்டை விட உணவகங்களைத் தான் அதிகம் நம்பி இருக்கின்றோமோ என்று தோன்றுகிறது!
எனது அலுவலகம் பக்கத்திலேயே ஒரு புதிய உணவகம் உதயமாகி இருக்கிறது. மலாய்க்காரர் ஒருவர் ஆரம்பித்திருக்கிறார். மலாய் உணவகம் என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு நம்மிடம் ஓர் அளவுகோள் இருக்கிறது. அப்படித்தான் இதுவும் இருக்கும் என்பதிலே ஒருமித்த கருத்து நம்மிடையே உண்டு.
உணவகத்தில் குளிர்சாதன வசதிகள் உண்டு. தொழிலை ஆரம்பித்திருக்கும் அந்த மலாய் நண்பருக்கு ஏகப்பட்ட புதிய புதிய எண்ணங்கள் உதயமாகிக் கொண்டே இருக்கும்! அந்த உணவகத்தைச் சுற்றி ஏகப்பட்ட மலாய் உணவகங்கள். ஏன்? எங்கள் தாமானிலேயே அனைத்தும் மலாய் (இந்தோனேசிய, தாய்லாந்து) உணவகங்கள் தான். இரண்டு மாமாக் உணவகங்கள். வியாபாரத்தில் மாமாக் தான் முன்னணியில்!
இந்த புதிய உணவகம் வந்த போது நண்பர் ஒருவர் "இரண்டு மாதத்தில் அடைத்துவிட்டு ஓடி விடுவான்! என்று அருள்வாக்கு உரைத்தார்! அது நடக்கவிலை!
அப்படி என்ன புதுமையைக் கையாள்கிறார் இந்த மனிதர்? முதலில் அங்கு விற்கின்ற விலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விலை. நீங்கள் சாப்பிட பத்து வெள்ளிபோதும் என்று நினைத்தால் அங்கு குறைந்தது முப்பது வெள்ளியாவது வரும்! எல்லாமே அப்படித்தான்! மற்றவை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
உணவகம் ஆரம்பிக்கும் போது காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை. பிறகு காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை. பிறகு காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை. இப்போது இரவு நேரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார். இரவு நேரத்து மார்க்கெட் நிலவரத்தை படித்துக் கொண்டிருக்கிறார். ஏதாவது புதிய யுக்திகளைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்!
இப்போது காலை நேரத்தில், பதினோரு மணி வரையில், விலையில் மாற்றத்தைக் கொண்டு வ்ந்திருக்கிறார். மற்ற உணவகங்களின் விலை என்னவோ அதே விலையில் காலை பசியாறலில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்!
ஆக காலையிலும் பிற்பகலிலும் அவருடைய உணவகத்தில் ஜேஜே தான்! இரவு நேரத்திலும் ஏதாவது புதிய யுக்தியைக் கையாளுவார் என எதிர்பார்க்களாம்.
இந்த மலாய் நண்பரின் உணவகத்தில் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்த உணவகத்தை நிர்வகிப்பவர் ஓரு தமிழ் இளைஞர் என்பது தான்.
திறமை எங்கிருக்கிறதோ அதைப் பயன்படுத்துவது தான் விவேகம். "எனக்கு எல்லாம் தெரியும்!" என்றால் அப்படி ஒரு மனிதன் இந்த உலகில் யாருமில்லை!
ஆமாம் நமது தொழில்களில் என்ன புதுமைகளைச் செய்ய முடியுமோ அதனைச் செய்யத் தயங்காதீர்கள். எத்தனை போட்டிகள் இருந்தாலும் புதுமைகளைச் செய்பவன் தொடர்ந்து தாக்குப் பிடிக்கிறான். தொழிலை வளர்க்கிறான். தொழிலில் நிலைத்து நிற்கிறான்.
எங்கள் பாட்டன் காலத்திலேயே நிற்பேன் என்பவன் விரட்டப்படுவான்! புதுமைகளை புகுத்துபவன் நிலைத்து நிற்பான்!
இப்படியும் செய்யலாமே!
No comments:
Post a Comment