Tuesday 18 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (50)

கோலாகலமான பெருநாள் காலங்கள் 

நமது நாட்டில் பெருநாள் காலங்களுக்குப் பஞ்சமேயில்லை!  தீபாவளித் திருநாள்,  ஹரிராயா பண்டிகை, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தினம் என்று நான்கு பெரிய பண்டிகைகளைக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் இடை இடையே சிறிய சிறிய பண்டிகைகள். 

சீனப் புத்தாண்டை கொண்டாடுவதில் சீனர்கள் நமக்குப் புதிய பாதையைக் காட்டிவிட்டார்கள். இப்போது அது அனைத்துப் பண்டிகைகளிலும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதாவது பண்டிகைக் காலங்களில் வெளி நாடு செல்வதில் சீனர்கள் அதி தீவிரம் காட்டுகிறார்கள். இப்போது நம்மில் பலர் அவர்களைப் பின்பற்றுவதைப்  பார்க்கின்றோம். தவறில்லை!

பொதுவாக பல விஷயங்களில் சீனர்கள் தான் நமக்கு வழி காட்டியாக இருக்கிறார்கள். ஆனால் பணம் அதிகம் செலவு செய்வதில் நாம் அவர்களைப் பின் பற்றுகிறோம். பணம் சம்பாதிப்பதில் நாம் அவர்களைப் பின்பற்றுவதில்லை. 

இது தான் நம்மிடம் உள்ள குறை. அவர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு உழைப்பைப் போடுகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அவர்கள் பெருமைக்காக எதையும் செய்வதில்லை. அவர்கள் முன் கூட்டியே திட்டம் போட்டு பயணத்திற்கான செலவுகளுக்குத் தயாராகி விடுகிறார்கள்.  அப்படியே செய்யவும் செய்கிறார்கள்.  அவர்களுடைய மாதாந்திர வரவு செலவுகளை அந்தப் பயணம் பாதிக்காதவாறு  பார்த்துக் கொள்ளுகிறார்கள்.  அது தான் சரி.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் நமக்கு மகிழ்ச்சி தான். அதன் மூலம் ஏதோ ஒரு சில விஷயங்களையாவது கற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் அதற்காக கடன் வாங்கி செலவு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே தீபாவளி வந்தால் அதனை "கடன்காரத் தீபாவளி" என்பதாக நாமே தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்! நாம் கடன் வாங்கிவிட்டு தீபாவளி மேல் பழி போடுகிறோம்! அப்போதும் செய்தோம் இப்போதும் செய்கிறோம்! 

வெளி நாடு பயணம் செய்ய வேண்டும், தீபாவளியை அர்த்தம் உள்ளதாகக் கொண்டாட வேண்டும், புதிய உற்சாகம் பெற வேண்டும்,  புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரியானது தான். ஆனால் அதனை கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது 

சீனர்களைப் பின்பற்ற விரும்புகிறோம். . ஆனால் சீனர்களின் உழைப்பை மறந்து விடுகிறோம். பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.  இருந்தாலும் இது போன்ற பயணங்களுக்கு அவர்கள் இன்னும் அதிகமாக உழைக்கிறார்கள்.  நாம் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறோம்.  அந்த வளர்ச்சியில் எந்த தொய்வும் ஏற்படக் கூடாது. அது நமது மாதாந்திர வரவு செலவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். 

பெருநாள் காலங்களைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதற்காக அதிகமாக கொஞ்சம் மிகையாக சம்பாதிக்க பழகிக் கொள்ள வேண்டும். அதனை நமது மாதாந்திர வரவு செலவுகளோடு இணைத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் முக்கியம்.

பெருநாள்களைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். பயனுடையதாக கொண்டாடுங்கள்.  மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.  ஆனால் கடான்காரனாக கொண்டாடாதீர்கள். 

அனைத்தும் நம் கையில் தான். கையில் பணம் அதிகம் புரளும் போது சிறப்பாக வெற்றிகரமாக கொண்டாடுங்கள். 

அப்படி இல்லையென்றால் அடக்கமாக கொண்டாடுங்கள்! யாரும் உங்களைக் கேள்வி கேட்கப் போவதில்லை!

No comments:

Post a Comment