வாழ்ந்தாலும் ஏசும் தாழந்தாலும் ஏசும்
இப்படி ஒரு பாடலை இப்போதோ எப்போதோ கேட்டிருப்பீர்கள். அல்லது என்றோ கேட்ட பாடலில் வலம் வந்திருக்கும்.
பாடலை எழுதியவர் கவி.கா.மு.ஷரிப்ஃ.
பாடல் என்ன சொல்ல வருகிறது? நீங்கள் நன்றாக வாழ்ந்தால் அப்போதும் உங்கள் மீது குற்றம் கண்டு பிடி;ப்பார்கள். பொறாமை கொள்ளுவார்கள். "இவன் கொள்ளையடிச்சித் தான் இப்படி பெரிய அளவில் வந்துட்டான்!" என்பார்கள்.
நீங்கள் தாழ்ந்துவிட்டால் என்ன சொல்லுவார்கள்? "அப்போ பணத் திமிரைக் காட்டினான்! இப்ப பாரு நாய் படாத பாடு படுகிறான்!" என்று இளக்காரமாக பேசுவார்கள்!
இது தான் உலகம். உலகம் சொல்லுகிறதே என்று பார்த்தால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது.
நமக்கு இரண்டும் வேண்டாம். பெருமையும் சிறுமையும் வேண்டாம். நமக்குத் தேவை நல்லதொரு வாழ்க்கை, வெற்றிகரமான வாழ்க்கை. நாலு பேருக்கு நல்லது செய்யக் கூடிய வாழ்க்கை. யாரையும் அசிங்கப்படுத்த வேண்டாம். அசிங்கப்படும்படி வாழவும் வேண்டாம்.
வெற்றிகர்மான வாழ்க்கை என்னும் போது நமக்கும் பிறருக்கும் பயன்படும்படியான வாழ்க்கை. அது மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த உலகத்திற்கு நம்மால் தேவையானவற்றை செய்ய முடியும்.
கீழ் நோக்கிய பயணம் என்றால் நமக்கோ, நமது குடும்பத்திற்கோ, இந்த சமுதாயத்திற்கோ ஒரு பயனும் இல்லை. ஒரு குடிகாரனாக ஆனால் போதும் குடும்பம் கீழ் நோக்கி சரிந்துவிடும்!
நன்றாக வாழத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம். அதை நன்றாகவே வாழ்ந்துவிட்டுப் போவோம். நாம் ஏழ்மையில் பிறந்திருக்கலாம். நாம் ஏழ்மையிலேயே வாழ வேண்டும் என்கிற அவசியமில்லை. அதனை மாற்றி அமைக்கும் சக்தி நம்மிடம் உள்ளது. இறைவன் நமக்கு அனைத்து சக்திகளையும் கொடுத்திருக்கிறார். அதனை நாம் பயன்படுத்த வேண்டும்.
நன்றாக வாழ்ந்தால் தான் இந்த உலகம் நம்மை மதிக்கும். பொறாமைக் கொண்டார் எந்நாளும் பொறாமைக் கண் கொண்டு நம்மை ஏசிக் கொண்டிருப்பர்.
எந்நாளும் நாம் தாழ்ந்து போகும் எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது.நினத்துப் பார்க்கவும் கூடாது. அது வேண்டவே வேண்டாம்.
ஏசினாலும் நாம் வாழ்ந்து காட்டுவோம்! தாழ்ந்து காட்டவே மாட்டோம்!
நாம் நன்றாக வாழ்ந்தால் மட்டும் போதாது. நமது பிறப்பு என்பது நம்மை நாமே காத்துக் கொள்ளுவது அல்ல. பிறரையும் காக்க வேண்டும். பிறருக்கும் உதவ வேண்டும்.
நாலுபேர் நம்மை மதிக்க, நம்மை நாலுபேர் பாராட்ட, நாட்டுக்கு நல்லது செய்ய நாம் வாழந்தால் அந்த நாலுபேர் நம்மை மெச்சுவார்கள்!
தரங்கெட்டு வாழ்ந்தால் தாழ்வாகத்தான் பேசுவார்கள்!
நாம் வாழ வேண்டும்! வீழ்வதாக இருக்கக் கூடாது!
No comments:
Post a Comment