Sunday 23 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (55)

நிறைய அனுபவங்கள் வேண்டும்

தொழிலில் வெற்றி பெற நிறைய அனுபவங்கள் வேண்டும் என்பது உண்மை தான்.  

அனுபவம் தான் சிறந்த ஆசான். அடிபட வேண்டும். உதை பட வேண்டும்.  கையில் காசு இல்லாத போது என்ன நடக்கும், என்ன நடக்காது - இதனை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அனுபவம் பெற வேண்டும்.

ஒரு வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.  மேலே சொன்ன அனுபவங்களைப் பெறுவதென்பது எளிதல்ல.  பல ஆண்டுகள் பிடிக்கும். இப்போது அந்த அனுபவங்களைப் பெற ஒரு சில நொடிகள் கூட போதும். இணையத்தளத்தில் நாம் அந்த பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

தொழிற் துறை சார்ந்த வெற்றிப் பெற்ற பல ஜாம்பவான்கள், பல வெற்றியாளர்களின் அனுபவங்கள் அனைத்தும் பல பேட்டிகளின் வழியாக தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய அனுபவங்கள் நமக்கு நல்ல பாடம். அவை விலைமதிக்க முடியாத பாடங்கள். நாம் ஒவ்வொரு அனுபவத்தையும் பெற பல ஆண்டுகள் பிடிக்கும். வெற்றி பெற்ற இந்த மனிதர்கள் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தும் போது அவைகளை நமது அனுபவங்களாக மாற்றிக் கொண்டு "எது வேண்டும், எது வேண்டாம்" என்பதை முடிவு செய்யலாம். 

நாம் ஒருவருடைய அனுபவங்கள் மட்டும் அல்ல பல வெற்றியாளர்களின் அனுபவங்களைக் கேட்பதன் வ்ழி நாமும் அவர்களுடைய அனுபவங்களைப் பெறுகிறோம்.

"யாருடைய அனுபவமும் எனக்குத் தேவை இல்லை நான் பெறுகின்ற அனுபவமே எனக்குப் போகும்"  என்று ஒருவர் நினைத்தால்  அதன்படி அவர் செய்யட்டும். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. அது அவரது திறமை. ஆனால் பெரும்பாலாவர்களுக்கு சிலருடைய அனுபவங்கள், வழிகாட்டுதல்கள் அனைத்தும் தேவைப்படுகின்றன.

மற்றவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும் போது அதையே நமது அனுபவங்களாக ஏற்றுக் கொண்டு நாம் நம்மைத் திருத்திக் கொள்ளலாம். அனுபவங்கள் தான் சிறந்த ஆசான். ஆசானுக்கெல்லாம் ஆசான். அதில் ஐயுற ஒன்றுமில்லை.

ஒரு முறை காலை வேலையில், கார் போக்குவரத்து இல்லாத நிலையில் ஒரு குறுக்கு வழியில் புகுந்தேன்.  எனக்கு எதிராக ஒரு போலீஸ் கார் வந்து என்னை இடை மறித்தது.  நான் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் சம்மன் கொடுத்தார்கள் பிறகு நீதிமன்றம் போய் கட்டினேன். அதன் பிறகு நான் அந்த தவற்றைச் செய்யவில்லை! அது தான் அனுபவம் என்பது!

இது ஒரு சிறிய அனுபவம் தான். பெரிய அனுபவங்கள் நமது எதிர்காலத்திற்கு நல்ல பாடங்கள். அதுவும் தொழிற் துறையில் பெரிய அனுபவங்கள் பல பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

அனுபவங்களைத் தேடிக் கொள்ளுங்கள். தக்கவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் இல்லையா? இருக்கவே இருக்கிறது இணையத்தளம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இளைஞனே!  அனுபவம் போதவில்லை என்றால் அதனைத் தேடி கண்டுபிடி! அது பல தவறுகளைத் தவிர்க்க உதவும்.

No comments:

Post a Comment