Thursday 27 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (58)

படிப்பதை நிறுத்தாதீர்கள்!

பொதுவாக ஒருவர் படிப்பதை நிறுத்துகிறார் என்றால் அத்தோடு அவர் தனது அறிவு வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பது தான் பொருள்.

இங்கு படிப்பது என்பதை பள்ளி படிப்போடு ஒப்பிடாதீர்கள்.  புத்தகங்கள் படிப்பதைத் தான் இங்கு நான் குறிப்பிடுகிறேன். குறிப்பாக நீங்கள் சார்ந்த துறையைச் சேர்ந்த நூல்களைப் படிக்கலாம். அது உங்களுக்கு நிச்சயமாக பயனைத் தரும்.

இந்த நேரத்தில் குறிப்பாக ஒன்றை நான் சொல்ல வேண்டும்.

 ஓரு பிரபலமான எழுத்தாளர்.  மர்மக் கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதியவர் ஒரு பேட்டியில் போது தனது கதைகள் காவல் துறையினருக்குக் கூட ஒரு வகையில் உதவியிருப்பதாக  ஒரு காவல் துறை அதிகாரி தன்னிடம் நேரடியாகச் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

அதே போல எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாதவர் யார்? அவருடைய எழுத்துக்கள் ஒரு மனநல மருத்துவருக்குப் பேருதவியாக இருந்தாக அவரே குறிப்பிட்டதாக பேச்சாளர் சுகி சிவம் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

நூல்களைப் படிக்கின்ற போது தான் சார்ந்த துறையைத் தேர்தெடுக்கலாம் அல்லது தான் சாராத நூல்களையும் தேர்ந்தெடுக்கலாம். எல்லாமே நமக்கு ஒரு பொது அறிவைக் கொடுக்கும்.  ஆனாலும் இன்றைய நிலைமையில் தான் சார்ந்த தொழிலோடு சம்பந்தப்பட்ட நூல்களை மட்டுமே பலர் படிக்கிறார்கள் என்பது தான் உண்மை. 

அது உண்மை என்றால் கூட படிப்பவர்கள் ஓரளவு வளர்ந்துவிட்ட தொழிலதிபர்கள் தான்.  சிறிய, நடுத்தர தொழில் செய்பவர்கள் நிலை என்ன? வழக்கம் போல சினிமா செய்திகளைப் படுத்திவிட்டு தான் சார்ந்த தொழிலைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். நாம் சிறியவரோ, பெரியவரோ நாம் எதனைப் படித்தாலும் சில செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.   நேரம் இல்லை என்று சொல்லாது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படிக்கலாம்.  அல்லது குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்து கொண்டு அந்நேரத்தில் படிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 

வர்த்தக சமூகத்தினர் படிப்பதை நிறுத்தி விடக் கூடாது. ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, அதனால் வரும் நன்மை, தீமைகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நமது வாடிக்கையாளர்களுடனான நமது அணுக்கமான உறவு சிறப்பாக இருக்கும்.

படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்!

No comments:

Post a Comment