ஹலோ டாக்டர் நலமா?
சிறு வயதிலிருந்தே சில நற்பண்புகளை நமது குழைந்தைகளின் மனதில் விதைக்கிறோம். சான்றாக பிள்ளைகளிடம் பேசும் போது நாமே அவர்களிடம் "வாங்க! போங்க!" என்று பேசுகிறோம். மற்றவர்களிடம் பேசும் போது பிள்ளைகள் வாங்க போங்க என்று பேச வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம்.
அது நல்ல பழக்கம் தான். யாரும் தவறு என்று சொல்வதற்கில்லை. இப்படி நற்பண்புகளை விதைக்கும் போது அது எப்படி குழந்தைகளின் மனதில் பதிகிறதோ அதே போல அவர்கள் வருங்காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ஒரு சில பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர்.
எனது நண்பர் ஒருவர் தனது மகன் பள்ளிக்கூடம் செல்லுவதற்கு முன்பே அவனை "டாக்டர்! டாக்டர்!" என்று அழைப்பதுண்டு. அவனது குடும்பத்தினர் அனைவருமே அவனை டாக்டர் என்று தான் அழைப்பர். அவர்கள் சொல்லுகின்ற செய்தி என்ன? அந்த சிறுவன் வருங்காலத்தில் ஒரு டாக்டராக வர வேண்டும் என்கிற இலட்சியத்தை சிறு வயதிலேயே அவனுக்கு ஊட்டப்படுகிறது ஊக்கம் கொடுக்கப்படுகிறது என்பது தான். அந்த பையன் இப்போது டாக்டராகி விட்டான்.
உங்கள் குழைந்தைகள் பிறக்கும் போது நீங்கள் ஏழ்மையில் இருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். இன்றைய ஏழ்மை நாளைய வளமை. அதனால் ஏழ்மை நிரந்தரமல்ல. அப்படியே இருந்தாலும் இவைகளையெல்லாம் மீறி தான் பல சாதனைகள் படைக்கப்படுகின்றன.
இப்போது எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஒரு இலட்சியத்தை ஏற்படுத்தி விடுங்கள். கைகளில் காசு இல்லையென்றாலும் "நம் வீட்டில் நீ தான் டாக்டர், நீ தான் பெரிய லாயர், நீ தான் பெரிய வாத்தியார் என்பதாக பெரிய இலட்சியத்தை ஏற்படுத்தி விடுங்கள். தினசரி இதனை நீங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வந்தாலே மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பது தான் இயற்கையின் நியதி.
பிராமணர்களிடையே ஒரு பழக்கம் உண்டு என்பார்கள். ஆண் குழந்தை பிறந்தால் "கலைக்டர் பிறந்துட்டாண்டி!" என்றும் பெண் குழந்தை பிறந்தால் "டாக்டர் பிறந்துட்டாடி!" என்று மனைவியிடம் சொல்லி மக்ழ்வார்களாம்! பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகத்தானே இருக்கிறது! ஒரு வளர்ந்துவிட்ட சமுகமே இப்படி செய்யும் போது வளரத் துடிக்கும் நமக்கு
இப்படி சொல்லுவதில் நமக்கு என்ன தயக்கம்? இதெல்லாம் மனோதத்துவம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதனால் உங்கள் குழந்தைகளிடம் இப்போதே சொல்லிப் பழகுங்கள். காசா, பணமா அப்புறம் என்ன தயக்கம்?
ஹலோ டாக்டர் நலமா?
No comments:
Post a Comment