குடி குடியைக் கெடுக்கும்!
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சும்மாவா சொன்னார்கள்?
வெள்ளைக்காரன் தங்கள் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் எங்கேயும் மாறிப் போய்விடக் கூடாது என்பதற்காக தோட்டங்கள் தோறும் கள்ளுக்கடைகளைத் திறந்து வைத்தான். இபோது அந்தக் கள்ளுக்கடைகள் எல்லாம் மறைந்து விட்டன. நாமும் மறந்துவிட்டோம்.
இதெல்லாம் நடந்து அதாவது நமது பாட்டன் பூட்டன் காலத்தில் நடந்தது. ஆனாலும் பாட்டன், பூட்டன் காலத்தில் நடந்தவைகளை இன்னும் அந்த மரபு அறுந்து விடக்கூடாது என்பதற்காக இந்தத் தலைமுறையும் அதனைத் தொடர்கிறார்களே அதைத் தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
இன்று தமிழன் தலை நிமிர முடியாமல் இருக்கிறானே அதற்கு யார் பொறுப்பு? இந்த குடிகாரத் தலைமுறை என்பதை நம்மால் மறக்க முடியுமா?
நமக்கு என்ன குறை? நம்மிடம் எல்லாத் திறமைகளும் உள்ளன. தனி ஆளாக நம்மை வீழ்த்த முடியாதவர்கள் இந்த "குடிகாரத் தலைமுறையை" வைத்து நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்! சரி அதற்கு ஒரு முடிவு கட்டுவோமென்றால் ஒருவனும் எதற்கும் ஒத்து வரமாட்டேன் என்கிறான்!
குடிகாரனாய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை எப்படி ஒழிப்பது? அப்பனிடம் இருந்து கற்றுக் கொள்ளுகிறான் மகன்! குடிப்பதை ஏதோ தொழில் போல் செய்கிறான் மகன்! பள்ளிகளிலேயே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். இன்னும் முழுமையாக இடைநிலைக் கல்வியை முடிக்கவில்லை அதற்குள் முழுமையான குடிகாரனாகி விடுகிறான்! அதன் பின் லோரி ஓட்டுனராகி பிழைப்பை நடத்துகிறான்!
இந்த குடிப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி எங்கே ஆரம்பிப்பது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது என்பதே புரியவில்லை!
தமிழர்களில் பலர் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். மற்ற இனங்களோடு போட்டி போடுகின்ற அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். இதனை மறுக்க முடியாது. பொருளாதாரம், கல்வி அரசியல் என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் நமது முன்னேற்றம் நமக்குத் தெரிகிறது.
ஆனாலும் பின் தங்கியிருக்கும் இந்த குடிகாரர்களினால் நமது சாதனைகள் அனைத்தும் பின் தள்ளப்பட்டு விடுகின்றன. அதனால் தான் நாம் பல வழிகளில் அரசாங்கத்தாலேயே ஏமாற்றப் படுகிறோம். நாம் இழிவு படுத்தப்படுகிறோம். நமது மொழி புறக்கணிக்கப்படுகின்றது. குடியுரிமை அற்றவர்களாக மாரடித்து புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
இந்த குடிகாரர்கள் மட்டும் திருந்தி "நாம் தமிழர்" என்று என்றைக்கு விழித்து எழுகிறார்களோ அன்றைக்கே நமது அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
தம்பி! இப்போது தான் குடிக்கப் பழகிக் கொMடிருக்கிறாயா? அதனை உடனே நிறுத்தி விடு! நாளை உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வர அனுமதியாதே! நாளை என்ன நடக்கும் என்பதை யார் கண்டார்?
குடி, குடியைக் கெடுக்கும் என்பது உண்மையிலும் உண்மை! இந்த குடிகார கூட்டத்தை நம் மத்தியில் அனுமதியாதே! அவனை மாற்ற என்ன செய்யலாம் என்பதை யோசி. அல்லது மாற்றி யோசி!
No comments:
Post a Comment