Friday 7 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (39)

வேலைகளைத் தள்ளிப் போடுகின்றவரா நீங்கள்?

நாம் பலவிதமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறோம்.  நது நமக்கு நன்மை உண்டாக்குமானால் அது நல்ல பழக்கம்.  தீமை உண்டாக்கும் பழக்கமாக இருந்தால் அது தீய பழக்கம்.

நமக்கு அதிகம் கேடு விளைவிக்கும் பழக்க என்றால் நமது வேலைகளைத் தள்ளீப்போடுவது! 

நாளை செய்யலாம், நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நாளை, நாளைத் தள்ளிப் போடுவது என்பது யாருக்கும் நன்மையைக் கொண்டு வர வாய்ப்பில்லை! 

இது நமது வேலை, இன்று செய்தாலும், நாளை செய்தாலும் இது நமது வேலை.  அன்றைய வேலையை அன்றே செய்வது என்பது மிகவும் உயர்வான பழக்கம்.  

நமக்கு உள்ள வேலையை என்று செய்ய வேண்டுமோ அன்றே செய்து முடித்து விட்டால் அது நமக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அதனை நாம் இழுத்துக் கொண்டு போவதால் அதுவும் நமக்கு ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  ஆமாம்.  நமது கடமையை நாம் ஒழுங்காக செய்யவில்லை என்றால் ஏதோ ஒரு குறைபாடு நமக்குள்ளேயே அழுத்திக் கொண்டிருக்கும்.  அது முக்கியமோ அல்லது முக்கியம் அல்லையோ, அது நமக்குக் கொடுக்கப்பட்ட வேலை, நம்மை நம்பி கொடுக்கப்பட்ட வேலை,  அப்படியென்றால் அதனைக் குறித்த நேரத்தில் முடித்து வைப்பது நமது பொறுப்பு.  இல்லையென்றால் நம்மை நாமே "பொறுப்பில்லாதவன்" என்கிற எண்ணத்தை அது ஏற்படுத்தும்!

உலகில் அனைத்துமே சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரண சேவல் கூட காலையில் சரியான நேரத்தில் கூவி நம்மை எழுப்புகிறது. அது தனது கடமையைச் சரியாக செய்கிறது. நாம் எழுந்திருக்கிறோமோ இல்லையோ அதுவல்ல அதன் வேலை,  நாம் எழுந்திருக்க வேண்டியது தான் நமது வேலை.

காலைக் கதிரவன் தள்ளிப் போனால் என்ன ஆகும்?  அப்படி ஒன்றும் ஆகாது. காரணம் அதன் கடமையிலிருந்து அது தவறுவதில்லை. இந்த பூமிப்பந்தில் எதுவுமே நேரம் தவறுவதில்லை. அதனதன் வேலையைச் சரியாகவே செய்து கொண்டிருக்கின்றன.

இதற்கு விதிவிலக்கு மனிதன் மட்டும்தான். எல்லாவற்றிலும் தள்ளிப்போடும் பழக்கம் உள்ளவன் மனிதன் மட்டும் தான். 

இன்றிலிருந்து நமது கடமையைச் சரியாகச் செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம்,  நாம் பணிபுரியும் இடத்தில் உள்ள வேலைகள், வீட்டில் நாம் செய்ய வேண்டிய வேலைகள், இந்த சமுதாயத்திற்காக நாம் செய்ய வேண்டிய வேலைகள் எதுவாக இருந்தாலும் சரி,  குறித்த நேரத்தில் அத்தனையும்  செய்து முடிப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்.  

வேலைகளை, கடமைகளை எதுவாக இருந்தாலும் சரி தள்ளிப்போடுகின்ற பழக்கம் நமது முன்னேற்றத்தைத் தள்ளிப் போடும். முன்னேறுவதை பாதிக்கும்.

தள்ளிப் போடுகின்ற பழக்கத்தை தள்ளி வையுங்கள்! அன்றைய வேலையை அன்றே முடிப்போம்! இன்றைய வேலையை இன்றே முடிப்போம்!

வேலைகளைத் தள்ளிப் போடுவது பழக்கம் அல்ல குழப்பம்!

No comments:

Post a Comment