Sunday 9 February 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (41)

முதலில் சம்பளம், மற்றவை பின்னர்!

கல்லுரிகளிலிருந்து  வெளியாகும் பட்டதாரிகளுக்கு கல்லூரிகளில் புதிதாக ஒரு பாடத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

பட்டதாரிகள் கல்லுரிகளிலிருந்து வெளியாகும் போது  வெளி உலகில் வேலை தேடும் போது முதலாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பாடம் தேவை என்று நான் நினைக்கிறேன். 

பொதுவாக பட்டதாரிகள் எந்த ஓர் அறிவும் இல்லாமல் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் படித்த படிப்புக்கும் அது சார்ந்து அவர்கள் தேடும் வேலைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரிவதில்லை!

முதலாளிகளிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி  "எவ்வளவு சம்பளம்?" என்பது தான்.   எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் அவர்கள் இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளுகிறார்கள்.  அப்படி செய்வதால் முதலாளிகள் அவர்களை ஏமாற்றி விட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் முதலாளிகளோ இவர்களைப் பார்க்கும் போதே, இவர்களின் பேசும் தோரணையே இவர்களின் வேலைத் திறன் எப்படி இருக்கும் என்பதைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்!

வேலைக்கு விண்ணப்பம் செய்பவர் எந்த ஒர் அனுபவமும் இல்லாதவர். ஆனாலும் சம்பளம் என்று வரும் போது கறாராக நடந்து கொள்ளுகிறார்!
தனக்கு வேலை தெரியும், தெரியாது என்பது பற்றி அவர் அலட்டிக் கொள்ளுவதில்லை!  

நமது பட்டதாரிகளுக்கு ஒன்று புரியவில்லை. அவர்களைப் போல பல  பட்டதாரிகள் வேலைக்காகச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன தான் வேலை செய்வார்கள் என்பது அவர்களுக்கே புரியவில்லை. எந்த ஒரு அனுபவமும் இல்லை. அனுபவத்தை பெற வேண்டும் என்னும் அக்கறையும் இல்லை.  கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லாத இவர்கள் வேலையில் சேர்ந்த பிறகு எந்த ஆர்வத்தைக் காட்டப் போகிறார்கள்?

எந்த வேலை கிடைத்தாலும், அங்கு குறைந்த சம்பளமே கிடைத்தாலும், வேலையை ஏற்றுக் கொண்டு ஓர் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அனுபவம் சும்மா வராது. வேலை செய்வதன் மூலம் தான் தேவையான அனுபவங்கள் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள். 

இப்போது உள்ள பட்டதாரிகளுக்கு ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. அவர்களுக்கு வேலை இல்லையென்றாலும் வீட்டில் சாப்பாடு கிடைத்து விடுகிறது. அதனால் வேலையைத் தள்ளிப்போட்டாலும் கேட்க ஆளில்லை! ஒரு வேலை கிடைக்கும் வரை ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை.

இந்த நேரத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய இளைஞர்கள் மட்டும் தான் பட்டாதாரிகள் என்று நினைக்காதீர்கள் கொஞ்சம் சீன இளைஞர்கள் பக்கம் திரும்பிப் பாருங்கள். அவர்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களா என்று கவனியுங்கள். நாமும் அவர்களும் எப்படி வித்தியாசப் படுகிறோம் என்று பாருங்கள். 

முதலில் சம்பளம் பேசுவதை முதலாளிகளிடம் விட்டுவிடுங்கள். உங்களின் வேலையறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவை பின்னர்!

No comments:

Post a Comment