கல்வி அமைச்சு என்பது சாதாரண 'ஏதோ ஒரு துறை' என்பதல்ல. அது நாட்டின் முதுகெலும்பு. அது நாட்டின் வருங்காலம்.
நாட்டில் அரசாங்கம் மாறலாம்; மாறிக் கொண்டிருக்கலாம். ஆனால் கல்வீத்துறை என்பது அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்க முடியாது அது கல்வி அல்ல! அராஜகம்!
நம் நாட்டில் ஆட்சி மாற்றத்தின் போது கல்வி அமைச்சர்கள் மாறுவது இயல்பானது. நாம் எதிர்பார்ப்பது தான்.
ஆனால் அப்படி கல்வி அமைச்சர்களாக வருபவர்கள் நம் நாட்டின் சூழலை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நாட்டில் மூன்று இனங்கள் வாழ்கின்றனர். நாட்டில் மலாய் மொழியே பிரதான மொழி. நாட்டில் மூன்று மொழி பள்ளிகள் இயங்குகின்றன. தேசிய மொழி பள்ளிகளைத் தவிர்த்து தாய் மொழி பள்ளிகளான சீனம், தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தாய் மொழி பள்ளிகள் என்பது நமது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் மொழி பள்ளிகள் மட்டும் இருநூறு ஆண்டுகளுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளன.
ஆக, தாய் மொழி பள்ளிகள் என்பது மலேசியர்களுக்குப் புதிதல்ல. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளால் கல்வி அமைச்சராக நியமிக்கப்படும் அமைச்சர்கள் தாய் மொழி பள்ளிகளைப்பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரியுமா, தெரியாதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை!
அப்படிப்பட்ட ஒரு சந்தேகத்தைத் தான் சமீப கால நிகழ்வு ஒன்று நம்மை அதிர வைக்கிறது. கல்வி அமைச்சரினால் சமீபத்தில் அமைக்கப்பட்ட தேசியக்கல்வி குழு ஒன்றுக்கு தமிழ் அறிந்த அறிஞர் பெருமக்கள் யாரும் இடம் பெறவில்லை. சீனர்கள் குழு என்று ஒன்று அமைக்கப்பட்டால் நிச்சயம் தமிழ் அறிந்த குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்பது சராசரி நடைமுறை என்பது கூட கல்வி அமைச்சருக்குத் தெரியவில்லை. அப்படி தமிழ் அறிந்த ஒருவர் இடம் பெறவில்லை என்றால் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை அமைச்சர் எப்படி அறிவார்?
ஏன் அந்தக் குழுவில் சீனர்கள் இடம் பெற வேண்டும்? அது ஏன் என்பது அமைச்சருக்குத் தெரியும். அதாவது சீனப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அமைச்சர் அறிந்திருக்க மாட்டார் என்பது அவருக்கே தெரியும். அப்படியிருக்க தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் அவருக்கு எப்படித் தெரியும்? இங்கும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள தமிழ் அறிந்த கல்விமான் அக்குழுவில் இடம் பெற வேண்டும் என்பதை ஏன் கல்வி அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை?
கல்வி அமைச்சர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் இருக்கத்தான் செய்யும். இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் இருக்கும். கல்வி என்று வரும்போது இந்த மூன்று பள்ளிகளையும் சேர்த்துத் தான் கல்வி அமைச்சர் முடிவுகள் எடுக்க வேண்டும்.
அது தான் உங்களின் பொறுப்பு!
No comments:
Post a Comment