எப்படி பார்த்தாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாகவே நமக்குப் படுகிறது.
துணிவு படத்தைப் பற்றியோ அல்லது நடிகர் அஜித் குமார் பற்றியோ நாம் எந்தக் கருத்தும் சொல்லப் போவதில்லை. அது அவசியமும் இல்லை. அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை!
ஆனால் இது போன்ற ஒரு கட் அவுட் வைப்பதும், அதனை 30 அடி உயரம் என்று சொல்லுவதும், மலேசிய சரித்திரத்தில் ஆகப்பெரிய கட் அவுட் என்பதும், அதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதும் நமக்கு என்னவோ அது நல்லதாகப்படவில்லை.
இது போன்ற சாதனைகள் நமக்குத் தேவையா? இதனால் யாருக்கு என்ன பயன்? அந்த கட் அவுட்டைக் கூட ஒரு சீனர் தான் செய்திருப்பார். ஒரு சீனர் நிறுவனம் தான் பொருளாதார ரீதியில் பயன் அடைந்திருக்கும்! அதனால் நாம் என்ன பயன் அடைந்திருக்கிறோம்?
சாதனை என்றால் ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் சாதனை, ஓர் ஏழை மாணவனின் சாதனை - இப்படியோ எத்தனையோ சாதனைகளை நமது இந்திய இளைஞர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சும்மா இது போன்ற கட் அவுட் ஒன்றைச் செய்துவிட்டு அது ஒரு சாதனையாக, சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதை என்னவென்று சொல்லுவது?
ஏன் ஆங்கிலப்படங்களுக்கோ, சீனப்படங்களுக்கோ இது போன்ற சாதனைகளைப் படைக்க அவர்களுக்குத் தெரியாதா? அவர்களை விடவா நாம் உயர்ந்து நிற்கிறோம்? அவர்கள் அதனை ஒரு சினிமாவாகப் பார்க்கிறார்கள். அத்தோடு முடிந்தது! நமக்கு மட்டும் ஏன் இப்படி? போட்டியாகப் பார்த்தால் கூட பரவாயில்லை! சண்டையை அல்லவா மூட்டி விடுகிறீர்கள்!
இன்று அஜித் கட் அவுட் நாளை விஜய் கட் அவுட்! இது தொடரத்தான் செய்யும்! விஜய் ரசிகர்கள் இப்போது மனதுக்குள்ளே கருவிக்கொண்டு தான் இருப்பார்கள்! இது தான் அறிவுகெட்ட சமூகம் ஆயிற்றே! ஒன்றுமே இல்லாததற்கு அடித்துக் கொள்பவர்களாயிற்றே! உரிமைக்காகக் கூட இப்படியெல்லாம் அடித்துக் கொள்ள மாட்டார்கள்! ஒரு சினிமா நடிகனுக்காக உயிரைக் கொடுக்கும் சமூகம் நாமாகத் தான் இருக்க முடியும்!
சினிமாத்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக விளங்கும் மாலிக் ஸ்ட் ரீம்ஸ் கார்போரேஷன் நிறுவனம் சினிமாத்துறையில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ரசிகர்களை மோதவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பது தான் நமது வேண்டுகோள்.
இது போன்ற பெரிய பெரிய விளம்பரங்கள் எல்லாம் நமது நடிகர்களுக்குத் தேவை இல்லை. அவர்களுக்கு இருக்கின்ற விளம்பரங்களே போதும்!
தவறான முன்னுதாரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்!
No comments:
Post a Comment