ஏ.ஆர். ரகுமானின் கலை நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது!
இப்போது குறை நிறைகளைச் சொல்லுகின்ற நேரம்! அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. விவாதப் பொருளாக மாறியிருக்கிறது! ஆனாலும் இது பற்றி பேச பெரிதாக ஒன்றுமில்லை! வழக்கம் போல நாம் பேசிக் கொண்டிருப்பது தான்!
இதற்கு முன்னும் சரி, இப்போதும் சரி, இனிமேலும் சரி நாம் இப்படி பேசிக்கொண்டுதான் இருப்போம்! பணம் போட்ட ஒவ்வொரு இரசிகனும் சரி அவன் போட்ட பணத்திற்கேற்ப அல்லது அவனது இரசனைக்கேற்ப அல்லது அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை! அதிருப்தி என்பது இருக்கவே செய்யும்.
ஏ.ஆர்.ரகுமான் என்பவர் உலகப்புகழ் பெற்ற இசை மேதை. அதை முதலில் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதோ தமிழ் திரைப்படங்களில் தன்னை அடைத்துக்கொண்டு வாழும் மனிதரல்ல! அவரை ஏதோ ஒரு தமிழ்ப்பட இசையமைப்பாளர் என்கிற கோணத்தில் பார்ப்பதை நமது இரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.
உலகப்புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞனின் நிகழ்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு தான் அனைத்தையும் அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
நிகழ்ச்சியின் கட்டணங்கள் 700 வெள்ளி வரை விற்றதாக சொல்லப்படுகிறது. தமிழ்ப்பட இரசிகன் 150 வெள்ளிக்கு மேலே, பெரும்பாலும், போகமாட்டான் என்பது ஓரளவு நம்மால் கணிக்க முடியும்! ஆனால் ஏற்பாட்டாளர்கள் 700 வெள்ளி டிக்கட் வாங்கிய நம், பிற இனத்தாரையும் திருப்திப்படுத்த கடமைப்பட்டவர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் மட்டும் தான் என்று சொல்லிவிட முடியாது. கூட்டம் சுமார் 60,000 பேர் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் தமிழர்கள் மட்டும் அல்ல, பிற இனத்தவரும் இருந்திருப்பார்கள். ஏன் வட இந்தியர்களும் இருந்திருப்பாளர்கள். இப்படி கலவையான ஓர் இரசிகர் கூட்டத்தில் இந்த மொழியில் தான் பாட வேண்டும் என்று சொல்லுவதை ஏற்பாட்டாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் நிகழ்ச்சியைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. இந்தி பாடல்கள் என்பது எல்லா இனத்தவராலும் விரும்பப்படுபவை. அதிலும் குறிப்பாக மலாய்க்காரர்கள். இப்படி பலதரப்பட்ட இரசிகர்கள் கொண்ட ஒரு கலை நிகழ்ச்சியில் "தமிழ் மட்டும்" என்று சொல்லுவது சரியல்ல.
நமது உரிமை என்று வரும் போது தமிழை விட்டுவிடுகிறோம். தேவையற்ற ஓர் இடத்தில் உரிமை கொண்டாடுகிறோம்! என்னத்தைச் சொல்ல!
No comments:
Post a Comment