இந்த இருவரின் படங்களான 'வாரிசு - துணிவு' இரண்டு படங்களும் வருகின்ற பொங்கலன்று வெளியாகின்றன.
படங்கள் வெளியாவதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல விஜய் - அஜித் நடிக்கிறார்கள். அவர்கள் படங்கள் வெளியாகின்றன. அதைத் தவிர வேறொன்றுமில்லை!
ஆனால் இந்தப் படங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்படுகின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! இது தமிழ் இளைஞர்களை அடிமைகளாக மாற்றுகின்றன என்பது மட்டும் உண்மை.
எவனோ பணம் போடுகிறான்! எவனோ நடிக்கிறான்! அட! நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். நம் தமிழ் இரசிகன் அடித்துக் கொள்கின்றான்! அவனைத் தூண்டி விடுவதற்கென்றே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது!
நன்றாகக் கவனியுங்கள். இந்த இரண்டு படங்களுமே ஆந்திராவில் தான் எடுக்கப்பட்டன. தமிழ் நாட்டிலுள்ள சினிமாத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு காசு கூட போய்ச் சேரவில்லை. அந்த வகையில் இருவருமே ரொம்பவும் பெருந்தன்மையானவர்கள்! படத்தை தயாரித்த ஒருவர் ஆந்திர மாநில, டாலிவூட்டைச் சேர்ந்தவர் இன்னொருவர் பம்பாய், பாலிவூட்டைச் சேர்ந்தவர். இந்தப் படங்களின் மூலம் வருகின்ற வருமானம் ஆந்திராவுக்கும், பம்பாய்க்கும் போய்ச் சேரும். இந்த இரு படங்களின் மூலம் தமிழ் நாட்டுக்கு ஒரு காசு இலாபம் இல்லை!
ஆனால் தமிழனுக்கு எந்த இலாபமும் இல்லாத இந்த இரு படங்களும் தமிழ் நாட்டு வசூலை நம்பித்தான் எடுக்கப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இந்த இரு படங்களுமே தமிழ் நாட்டில் ஓடவில்லை என்றால் நமது கதாநாயகர்களின் புகழ், பணம் அனைத்தும் அரோகரா!
இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதற்காக தமிழ் நாட்டு இரசிகன் அடித்துக் கொள்கிறான், கடித்துக் கொள்கிறான், உயிரையே கொடுக்கிறேன் என்கிறான்! தமிழ் நாட்டுக்கு இலாபம் இல்லாத இரு படங்களும் தமிழ் இரசிகனை நம்பித்தான் வெளியாகின்றன!
ஒன்று செய்யலாமா? இந்த இரு படங்களுமே வெளி மாநிலங்களில் ஓடட்டும். வெளி நாடுகளில் ஓடட்டும். உலகம் எங்கும் ஓடட்டும். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சுமாராக ஓடட்டும்! அது ஒன்றே போதும். இந்த நடிகர்களுக்கு தமிழ் இரசிகன் ஓரஙகட்டிவிட்டான் என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழ் இரசிகனின் பணம் வேண்டும் ஆனால் படங்கள் மட்டும் வேறு மாநிலங்களில் எடுக்க வேண்டும். ஏன்? நடிகனுக்கு மட்டும் தமிழன் பிழைக்கக் கூடாது! ஆனால் அவன் மட்டும் பிழைக்க வேண்டும்! தமிழன் வாரி வழங்க வேண்டும்! ஓகோ என்று அவன் பெயர் வாங்க வேண்டும். தமிழனுக்கு மட்டும் என்ன தலையெழுத்து? நடிகன் பேர் வாங்கினால் என்ன வாங்கவிட்டால் என்ன?
தமிழ் இரசிகன் இவர்களுக்குப் பாடம் புகட்டுவான் என நம்பலாம்!
No comments:
Post a Comment