நண்பர் ஒருவர் புதிதாக உணவகம் திறந்திருந்தார்.
நாம் அதனை நல்ல செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் வியாபாரங்களில் ஈடுபடுவது நமக்கு நல்ல செய்தி தான். நம் இனத்தவர் நாலு பேர் நல்லா இருந்தால் நமக்கும் நல்லது தானே என்பதாகத்தான் நான் அதனைப் பார்க்கிறேன்.
நம் இனத்தவர் தொழில் செய்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். அதையெல்லாம் மீறித்தான் நம்மில் பலர் பெயர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; வெற்றியும் பெறுகிறார்கள்
மேலே சொன்ன உணவகம் திறந்த அந்த நபர் தொழிலுக்குப் புதியவர். அவரிடம் ஆர்வமிருந்தது. தொற்று நோயின் தாக்கம் குறைந்து மீண்டும் தொழில்கள் தலையெடுக்கும் நேரம் அவர் தொழிலை ஆரம்பித்திருந்தார்..
ஆரம்பித்த சில நாள்களிலேயே பிரச்சனைகளை எதிர்நோக்கினார். அவருக்குப் பழக்கமில்லாத உணவகத் தொழில் இது. வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் உதவினர். ஆனால் போதவில்லை. வேலை செய்த ஓரிருவரை வைத்து அவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். விடுவதாக இல்லை!
ஆனாலும் அவருக்குத் தொடர்ந்து அடி விழுந்து கொண்டே இருந்தது. வேலை செய்தவர்களோ அக்கறை இன்றி வேலை செய்தனர். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற நிலை உருவாகிவிட்டது. நண்பர் தள்ளாடிப் போனார். அந்த நிலையிலும் அவர் கலங்கவில்லை. எப்படியாவது தொழிலை சரிசெய்ய வேண்டும் என்று தான் நினைத்தார். ஓடிப்போகும் எண்ணம் இல்லை. முன் வைத்த காலை பின் வைக்க விரும்பாதவர். "என்ன நடந்தாலும் போராடுவேன்!" என்கிற மன உறுதி அவரிடம் இருந்தது.
இதற்கிடையே வாடிக்கையாளர் ஒருவர் "இந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இல்லை!" என்று ஒரு செய்தியைப் பரப்பி விட்டார்! புதிய உணவகம் என்று தெரிந்தும் இது போன்ற செயல்களினால் அந்த உணவகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் அந்த வாடிக்கையாளர் எதைப்பற்றியும் கவலையில்லாமல் செய்தியைப் பரப்பிவிட்டார்!
நண்பர்களே! நாம் காசு கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடுகிறோம். சும்மா யாரும் சாப்பாடு போடவில்லை. உண்மை தான். சாப்பாட்டில் குறை இருந்தால் அதற்கு அந்த உணவகத்தார் தான் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனாலும் நமக்கும் தார்மீக பொறுப்பு என்று ஒன்றிருக்கிறது.
தொழிலுக்குப் புதியவர் என்பதால் அதனைப் பெரிது படுத்தாமல் அவர்களை மன்னித்து விடலாம். ஒரு வேளை அங்குப் போவதை நிறுததலாம். சில மாதங்கள் கழித்து அங்குப் போனால் அவர் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்.
நம் இனத்தவரிடையே பெரிய குறைபாடு என்பது நம்மை நாமே காட்டிக் கொடுப்பது தான். நம்மவர் செய்கின்ற தொழிலை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பூதாகாரமாக மாற்றிவிடுகிறோம்! ஏதோ நம்ம ஆள் தானே என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம் தொழிலுக்கும் நல்லது.
சீனர் கடைகளில் தவறு நேர்ந்தால் அங்கே மீண்டும் போகக் கூடாது என்கிற முடிவுக்கு வந்து விடுகிறோம். மலாய்க்காரர் கடைகளில் தவறு செய்தாலும் மீண்டும் அங்குப் போவதைத் தவிர்க்கிறோம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் சீனர் கடையில் மீ சாப்பிடும் போது அதில் புழு இருந்ததைச் சுட்டிக்காட்டியதும் அவர்கள் அதனை மாற்றி புதிதாக வேறு ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண் அதனைப் படம் எடுத்து வைத்திருந்ததை என்னிடம் காட்டினார்.
இதனையே நம் இனத்தவர் தவறு செய்தால் மட்டும் பெரிதாக - பெரிய பிரச்சனையாக மாற்றியமைத்து விடுகிறோம். தவறுகளை மன்னியுங்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.
என்ன தான் சொன்னாலும் பேசினாலும் தவறு என்னவோ தவறு தான்!
No comments:
Post a Comment