பரவாயில்லை! எத்தனையோ ஆண்டுகள் நாம், இந்த இந்திய சமுதாயம், ம.இ.கா. வை நம்பி ஏமாந்திருக்கிறோம். நல்லதும் நடந்திருக்கிறது! கெட்டதும் நடந்திருக்கிறது!
நல்லது நடந்தது, அது ஒரு காலகட்டத்தில். துன் சம்பந்தன் அவர்கள் அவர் காலத்தில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தை அமைத்தார். மக்களிடமிருந்து பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து தோட்டங்களை வாங்கினார்.
அவருக்குப் பின் வந்தவர்கள் ஆயிரம் ஆயிரமாக வாங்கினார்கள். காசு போன இடம் தெரியிலே! இந்தியர்கள் வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்கள் தான்! அதன் பிறகு எழுந்திருக்க முடியவில்லை.
அது முடிந்து போன கதை. அதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்! "இனி எங்களை நம்ப வேண்டாம்! நம்பிக்கைக் கூட்டணி, பிரதமர் அன்வாரை நம்புங்கள்" என்று சரண் அடைந்து விட்டார்கள்! அவர்களைப் பற்றி பேசியும் நமக்கு ஓய்ந்துபோய் விட்டது!
அதனாலென்ன? இனி நம்பிக்கைக் கூட்டணியை நம்புவோம். ஆனால் எல்லாக் காலங்களிலும் யாரையோ ஒருவரை நம்பி உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள். இந்திய சமுதாயத்திற்கு எது நன்மை பயக்குமோ அதற்காக நாம் போராடித்தான் ஆக வேண்டும். சான்றுக்கு, கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், தாய்மொழி பள்ளிகள், குடியுரிமை பிரச்சனைகள் - இவைகள் எல்லாம் நமது உரிமைகள். அவைகளைப் பாதுகாப்பது இனி நம்பிக்கைக் கூட்டணியின் கடமை.
வருங்காலங்களில் நாம் அனைத்து - எந்த இனத்தவராக இருந்தாலும் - அவர்களைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். நாம் எந்தக் காலத்திலும் இந்தியர்களை நம்பி நமது பிரச்சனைகளைக் கொண்டு செல்வதை நாம் தவிர்க்க வேண்டும். இந்தியர்கள் மட்டுமே என்கிற ஒரே வழி நமக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதனால் தான் ம.இ.,கா. வினர் இந்திய சமூகத்தை இளிச்சவாய சமூகமாக மாற்றிவிட்டனர். நாம் எந்த சமுகத்தவராக இருந்தாலும் நம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில் அவர்களை அணுக வேண்டும். ஆரம்ப காலங்களில் நமக்கு அது ஏற்புடையதாக இருக்காது! காரணம் கடந்து வந்த வழி அப்படியில்லை! இப்போது நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பரவாயில்லை! கடந்த வந்த பாதை நம்மை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது என்பதற்காக யாரையுமே நம்பக்கூடாது என்பதில்லை. கறுப்பு ஆடுகள் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளின் இயல்பு அப்படித்தான். அதனை யாரே மாற்றவல்லார்?
நாம் நம்மை நம்புவோம். அது தான் அறுபது ஆண்டு பாடம் நமக்குக் கற்பிப்பது!
No comments:
Post a Comment