Thursday 28 December 2023

தண்ணீரின் விலை 5.00 வெள்ளியா?

 

பெரும் தங்கும் விடுதிகளில் ஒரு  கிளாஸ் தண்ணீர் ஐந்து வெள்ளி என்றால்  அதனைத் தூக்கி வீசிவிட்டுப் போவோம்!  காரணம் அங்கு அதன் விலை அப்படித்தான் இருக்கும் என நாம் அறிவோம்.


அதுவே சாதாரண உணவகங்களில்  நிலை வேறு.  அங்குப் பெரும்பாலும்  20 காசுகள் அல்லது மிஞ்சிப் போனால் ஒரு வெள்ளி.  இதனை  நாம் பார்த்திருக்கிறோம். 

ஆனால் பெரும் ஓட்டலுமல்ல சாதாரண உணவகம் தான். அங்கு ஒரு கிளாஸ் தண்ணிரின் விலை  ஐந்து ரிங்கிட் என்றால்  நமது மனநிலை எப்படி இருக்கும்?  அதுவும் சுற்றுலா நகரமான லங்காவியில் இது நடந்திருக்கிறது!

லங்காவி நகரம் என்பது சுற்றுலா பயணிகளிடையே  மிகவும் பிரபலம். வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்ல உள்நாட்டிலிருந்தும் நிறைய பேர் விடுமுறைகளில் அங்கு வருகைப் புரிகின்றனர். அரசாங்கமும் சுற்றுப்பயணிகள்  லங்காவிக்கு வருவதை ஊக்குவிக்கின்றது.

ஆனால் சில வியாபாரிகள் செய்கின்ற இது போன்ற விஷமத்தனங்கள்  அந்த தீவின் பெயரையே நாறடித்து விடுகின்றது. ஒரு கிளாஸ் தண்ணீர்  இந்த விலை என்றால் மற்ற பொருள்களின் விலை எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும்  'டியுட்டி - ஃபிரீ' நகரம்  என்கிறார்கள்.

இவ்வளவும் செய்துவிட்டு  அந்த உணவகத்தின் முதலாளி  தனது வேலையாள் செய்த தவறு என்று வேலையாள் மீது பழி போடுகிறார்! முதலாளியின் உத்தரவு இல்லாமல்  ஒரு தொழிலாளி தனது விருப்பத்திற்கு  விலையைப் போட முடியுமா? இத்தனை ஆண்டுகளாக அந்த தொழிலாளி அந்த விலையில் தான் தண்ணீரை விற்பனைச் செய்திருக்கிறார்.  அப்போதெல்லாம் அது தவறு என்று அவர் சொல்லவில்லை!  யாரோ ஒருவர் கண்டுபிடித்தார் அதனை  ஊடகத்தில் பதிவு செய்தார்.  இப்போது அது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.  அது தவறு என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி அல்ல எனச் சொல்லுகிறார்! 

எப்படியோ இது போன்று ஏமாற்றுபவர்களை ஊடகங்கள் உடனடியாக வெளியே கொண்டுவந்து விடுகின்றன. அவர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.   இது போன்ற ஏமாற்று வேலைகள் பரவலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது.  விலைவாசி ஏறிவிட்டது என்று சொல்லி வியாரிகள் தங்கள் விருப்பத்திற்கு விலைகளை ஏற்றிவிடுகின்றனர்.

சாதாரண ஆறின தண்ணீர் ஒரு கிளாஸ்  ஐந்து வெள்ளி  என்றால் வெது வெது சுடு நீர்  பத்து வெள்ளியாக இருக்குமோ!

No comments:

Post a Comment