நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் அறிவித்திருக்கிறார்.
ஒரு பக்கம் கொரோனா பயம்; அதுவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதாக செய்திகள் வருகின்றனர் இப்போது டிங்கியும் சேர்ந்து கொண்டது. மக்கள் நாம், அலட்சியமாக இருக்கும் வரை வியாதிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
கொரோனா தொற்று வேண்டாமென்றால் பாதுகாப்பாக இருங்கள் முகத்தில் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். கூட்ட்ம் உள்ள இடங்களைத் தவிருங்கள். வெளியே சுற்றாதீர்கள். இப்படி சில கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தால் கொரோனாவினால் வரும் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
டிங்கி என்பது தேங்கி நிற்கும் நீரால் வருவது. வீட்டுக்கு வெளியே ஏதாவது தண்ணீர் தேங்கி நிற்கிறதா பாருங்கள். காலி டப்பாக்காள், கொட்டாங்குச்சிகள், உடைந்த மங்குகள் - இவைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதா பாருங்கள். அவைகளின் தண்ணீர் தேங்காதபடி அவைகளைக் கவிழ்த்துப் போடுங்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் தான் டிங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடம். அவைகளை வாழ விட்டால் அவை நமது வாழ்வுக்கு வேட்டு வைத்து விடும்!
சுகாதார அமைச்சு அவ்வப்போது கொரொனா பெருந்தொற்றை தவிர்ப்பது எப்படி, டிங்கியின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்று அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் அதனை அலட்சியம் செய்கிறோம். தாக்குதல் வரும்வரை அலட்சியப்படுத்துவதும் வந்த பிறகு 'ஐயோ! ஐயகோ! என்று கூப்பாடு போடுவதும் நாம் தான்! யார் என்ன செய்ய முடியும்? அப்படியே பழகி விட்டோம். நம்மால் நம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குறை சொல்லுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். பிறரையே குறை சொல்லுவது என்கிற பழக்கத்தை நாம் கொண்டிருப்பதால் நமது குறை என்னவென்று நமக்குத் தெரிவதில்லை!
குறிப்பிட்ட அந்த இரண்டு வியாதிகளையும் தவிர்க்க எளிமையான வழிகளைக் கூறியிருக்கிறேன். வேறு பல வழிகளும் உண்டு. மருத்தவர்கள் தான் சரியான வழிகளைக் கூறவேண்டும்.
எப்படியோ மீண்டும் டிங்கி பரவுகிறது. கொரோனா பெருந்தொற்று அதுவும் சிறகடித்துப் பறக்கிறது! நாம் அதனை முறியடிப்போம்!
No comments:
Post a Comment