Tuesday 12 December 2023

அமைச்சரவை மாற்றம்

 


சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது என்ன?  புதிதாதக நான் எதையும் சொல்லிவிடப் போவதில்லை. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான்  இருக்கிறது.   தமிழர்களைப் பொறுத்தவரை இது பெரிய ஏமாற்றம் தான்.

சரி, அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தின் நியாயத்தையும்  நாம் ஆராய வேண்டியுள்ளது.

இத்தனை ஆண்டுகள் அதாவது அறுபது ஆண்டுகளுக்கு மேல் யார் பதவியில் இருந்தார்கள்?  அவர்கள்  எல்லாரும் தமிழர்கள் தான். .  ஓயாமல் அவர்களைக் குறை கூறியவர்களும் நாம் தான்!  அவர்கள் சய்த பல தவறுகளின் காரணத்தினாலே தான்   அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்  என்கிற  எண்ணமே நமக்கு ஏற்பட்டது.

அப்படி ஒரு சூழ்நிலை வந்ததால் தான்  நாம் அவர்களை எதிர்த்தோம்.  அவர்கள்  அன்று சரியான பாதையைப் போட்டுக் கொடுத்திருந்தால்  இந்த சமுதாயம் இந்த அளவுக்குச் சீரழிந்து போய் இருக்க நியாயமில்லை.  

ம.இ.கா. பல வழிகளில் இந்தியர்களுக்கு உதவியிருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும்  அதே சமயம் பல வழிகளில் நம்மை வீழ்த்தியும் இருக்கிறது.

முக்கியமாக கல்வி, பொருளாதாரம்  - இவைகள்  தான் நாம் காலங்காலமாகப்  பேசி வரும்  விஷயம்.    மிக மிக முக்கியமான விஷயத்தில்  நம்மைக் கவிழ்த்தவர்கள் ம.இ.கா.வினர் தான்.  துன் சம்பந்தன் அவர்கள் ஆரம்பித்த தேசிய நிலநிதி கூட்டுறவு  சங்கத்தோடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது நமது பொருளாதார  முயற்சி.  அதற்குப் பிறகு வந்தவை அனைத்தும்  நம்மை முன்னுக்குப் போக விடாமல்  பின்னுக்கும் இழுக்கும் முயற்சி தான்.  டாக்டர் மகாதிர் தான் அதன் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.  இந்தியர் முன்னேறுவதை  அவர் விரும்புவில்லை. அதற்கான ஒத்துழைப்பு ம.இ.கா. தலைமைத்துவம்  அவருக்குக் கொடுத்தது.

கல்வியிலும் அரசாங்கம் கொடுத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு  நமது உரிமகளை விட்டுக்கொடுத்தவர்கள் ம.இ.கா.வினர்.  தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மாநியங்கள், நிலங்கள் அனைத்திலும் கைவைத்தவர்கள் ம.இ.கா.வினர்.   ஆழமாகப் போனால் அங்கே துரோகச் செயல்கள்  அநேகம்.  

இந்த துரோகச் செயல்களினால் தான்  இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது  நமது சமுதாயம்.  இதையெல்லாம் கூட இருந்து பார்த்தவர்  தான் இன்றைய பிரதமர்.  தமிழர்களை நம்ப முடியவில்லை என்பதால் தான் இன்று அவர் ஒரு தமிழரற்ற அமைச்சரைவையை அமைத்திருக்கிறார்.  இது எப்படிப் போகிறது என்று பார்ப்பதற்குதான்    இப்போதைய அமைச்சரவை.

இந்த மாற்றம் நமக்குப் பெருமை அளிப்பதாக இல்லை என்பது உண்மை தான்.  ஒரு வேளை இதுவே நமக்குச் சரியான பாதையாகக்  கூட இருக்கலாம்.  ஒரு பாதை சரியாக அமையவில்லை என்றால் இன்னொரு பாதை  அமைத்துப் பயணம் செய்வது தான் புத்திசாலித்தனம். அவ்வளவு தான்.  இது சரியா தவறா என்பதை  இப்போது சொல்ல முடியாது. காலந்தான் சொல்ல வேண்டும்.  இன்னும் நான்கு ஆண்டுகளில் இதற்கான பதில் தெரியும்.

அதுவரை பொறுமைக் காப்போமே!

No comments:

Post a Comment