Saturday 23 December 2023

இனி உங்களுக்கு யோகம் தான்!


 உண்மையைச் சொல்லுங்கள். யாருக்கு யோகம் வரும்?  'செய்வன திருந்தச் செய்'  என்கிறார்களே, அதனைக் கடைப்பிடிக்கிறார்களே,  அவர்களைத்தான் யோகம் தேடி வரும் . 

செய்வதைத் திருந்தச் செய்தால் அனைத்தும் உங்களைத் தேடி வரும். இதனை முதல் கடமையாக நமது அரசியல்வாதிகள் கடைப்பிடித்திருந்தால் நம் இனத்தவரின் நிலையே வேறு. 

ஆனால் அனைத்தும் இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. ஈப்போ ராஜா  பெர்மேஸ்வரி  பைனுன் மருத்துவமனையில் பாதுகாவலாராக  பணிபுரியும் யோகேஸ்வரிக்கு மாட்சிமை தங்கிய பேரரசர், தனது பிறந்த நாளில்,  பி.பி.என். விருது கொடுத்து  பெருமைப்படுத்தியிருக்கிறார்.

யோகேஸ்வரி அப்படி என்ன சாதனைப் புரிந்திருக்கிறார்?  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், வாகனக்கள் -   இவர்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கிறார்.  மருத்துவமனையில் எந்த இடத்திற்குப் போக வேண்டும்,  எந்த இடத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் - இப்படி சிறிய சிறிய உதவிகள், வாகனங்களை நிறுத்துவதற்கு வழி காட்டுதல்  போன்ற எல்லா வழிகளிலும் அவர் உதவியாக இருப்பது மருத்துவமனைக்குப் போகும் பொது மக்கள்   அவருக்கு நல்ல பாராட்டுகளைக் கொடுத்தனர்.

நோயாளிகள், பொது மக்களின் பாராட்டுகள் இவைகள் அனைத்தும் அவரை பேரரசரிடம் விருது பெறுகின்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டது.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான்.  உண்மையும், நேர்மையும், உழைப்பும்  இருந்து விட்டால்  நமக்குப் பட்டம் பதவியெல்லாம் தானாக தேடி வரும்.  இது தான் உலக இயல்பு.  யோகேஸ்வரிக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை. அவர் வேலையை அவர் செய்தார். பொது மக்களின் பாராட்டுதலைப்  பெற்றார்.  அது ஊடகங்களில் வைரலானது.  கடைசியில் பேரரசரின்  பார்வைக்கும் சென்றது.  நல்ல செயல்கள் செய்யும் போது  அனைத்தும் அவர் பக்கம் துணை நிற்கும்.  அது தான் நின்றது.

யோகேஸ்வரி பெரிய பதவியில் இல்லை. அவர் செய்கின்ற  அந்த சாதாரண தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.மக்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார். மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.

அது போதுமே! பேரரசரின் விருது பெற!

No comments:

Post a Comment