Wednesday 13 December 2023

இனி நமது வேலையைப் பார்ப்போம்!

 

பிரதமர் அன்வாரின் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  தமிழர் பலருக்கு அதிருப்தி   தமிழரல்லாதாருக்குப் பரம திருப்தி.

இருந்தாலும் அமைச்சரவை மாற்றம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.  நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இது தான் அமைச்சரவை.  வேறு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  ஏற்றுக் கொள்ளுங்கள்.  அதனைப் பிரதமரும் உறுதிப்படுத்திவிட்டார்.

இனி நமது வேலையை நாம் பார்க்க வேண்டியது தான். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசியல்வாதிகளின் பக்கம் போகாதீர்கள். வெளியே இருந்து கூக்குரலிட்டுக் கொண்டிராதீர்கள்.  அது நமது வேலையல்ல.  அரசியல்வாதியின் உதவி தேவை என்றால் உங்கள் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாடுங்கள். உங்கள் பிரச்சனையை 'நான் கேட்கமாட்டேன்' என்று அவர்கள் சொல்லப்போவதில்லை.

நாம் எப்போதுமே தமிழர்களை நம்பியே வாழ்ந்த கூட்டம். அதனால் தான் 'தமிழன்! தமிழன்!'  என்று கூப்பாடு போடுகிறோம்.  அடுத்த நான்கு ஆண்டுகளில் நாமும் பழகிக் கொள்ளுவோம். பழக்கத்திற்கு வந்துவிட்டால்  அது இயல்பு ஆகிவிடும்.  அது சீனராக இருக்கலாம் அல்லது மலாய்க்காரராக இருக்கலாம். யாராக இருந்தால் என்ன? அவர்கள் நமக்குச் சேவை செய்யத் தான் இருக்கிறார்கள். சேவையும் செய்வார்கள்.

அதனால் அரசியல் பேசிக் கொண்டிருப்பதைவிட நமது வேலையில் கவனம் செலுத்தினால் நாலு காசு நாம் பார்க்கலாம்.   நமது உழைப்பில் கவனம் செலுத்தினால்  நாம் உயர்ந்து நிற்கலாம்.  அரசியல்வாதி நம்மை உயர்த்திவிடப் போவதில்லை. அவனை உயர்த்திவிடும் வேலை நம்முடையதல்ல.  அவனை உயர்த்திக் கொள்ள ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.  ஆனால் நம்மை உயர்த்திக் கொள்ள தனி ஆளாக நாம் தான் போராட வேண்டும்.

நம் வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். நாம் வெற்றி பெறுவது தான் நமக்கு  முக்கியம்.  நாம் ஒரு வளமான சமுதாயம் என்றால் அரசியல்வாதி நம்மை ஏமாற்ற மாட்டான்.  ஆனால் நாம் அரசியல்வாதியோடு சேர்ந்தால்  அவன் தான் உயர்வான். நாம் தாழ்வோம். இது நிச்சயம்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நமது உயர்வைப்பற்றி நாம் சிந்திப்போம். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment