Thursday 14 December 2023

இனி நீண்ட காற்சட்டை!

 


இனி மலேசிய ஆண்கள் நீண்ட  சிலுவார்களை அணிந்து தான்  வெளியே  செல்லவேண்டும்   என்கிற கட்டாயம் ஏற்படும் போல் தோன்றுகிறது.

நாம் அரசாங்க அலுவலகங்களுக்கு வேலையாகப் போனால்  நாம் அதற்கேற்றவாறு உடை அணிந்து செல்லலாம்.  ஆனால்  நாம் தினசரி அலுவலில் இருக்கிறோம்.  எல்லாருமே நீண்ட காற்சட்டை அணியும்  வேலையில்லை.  பலர் அரைக்கால் சிலுவார்  அணியும் வேலைகளில் இருக்கின்றனர். குறிப்பாக தோட்டப்புறங்களிலே  நிர்வாகத்தில் வேலை செய்வோர் அரைக்கால் சிலுவார் தான் அணிவர்.  அதே போல என்ஜினியர்கள் பலர் அரைக்கால் சிலுவார் அணிவதும் உண்டு.

இவர்கள் எல்லாம் ஒரு வேலையாக அரசாங்க அலுவலகம் போகும் போது  நீண்டகாற்சட்டை தான் அணிந்து கொண்டு  போக வேண்டும்  என்பது  சுத்த பைத்தியக்காரத்தனம்  அல்லவா?  சில வேலைகளுக்கு அரைக்கால் சிலுவார் அணிவது  தான் மரபு. சிலர் வேலையில் இருக்கும் போது அப்படியே அரசாங்க அலுவலகங்களுக்குப் போவார்கள்.  அவர்களைத் தண்டிப்பது சரியா?

ஒன்றும் புரியவில்லை.  இளம்  பெண்கள் அரைக்கால் அணிவது சரியில்லை  என்று சொல்லுவதை நாம் புரிந்து கொள்ளுகிறோம்.அதற்காக வயதானவர்களைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  கல்லெறிவது சரியான செயலாகத் தெரியவில்லை.  ஆண்கள் அப்படி ஒன்றும் கவர்ச்சியாக உடை அணிவதில்லை.

சும்மா ஏதையாவது சொல்லி குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற  போக்கு இப்போது  அதிகமாகத் தோன்றுகிறது.   முதலில் பெண்கள். சும்மா சொல்லக் கூடாது.  ஒரு சில பெண்கள் மிக மோசமாக உடை  அணிவதை நாம் பார்க்கிறோம்.  நாமும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் வயதானவர்கள், வயதான ஆண்கள் கூட  ஆபாசமாக உடை அணிகிறார்கள் என்று சொல்லுவதில் எந்த வகையில் நியாயம்  என்று  நமக்கே புரியவில்லை. 

வயதானவர்களைக்  கைலியைக் கட்ட சொல்லி வற்புறுத்துவது  சரியானதாகத் தோன்றவில்லை. அந்தக் கைலியை இதுவரை எத்தனை பேர் கட்டியிருப்பார்களோ தெரியவில்லை.   அதனைப் பாவித்த பின்னர்  சலவைக்குப் போடுவார்களா? அதன் மூலம் வியாதியும் பரவக் கூடிய சாத்தியம் உண்டு.

சும்மா ஒரு கைலியைக் கொடுத்து 'இந்தா அணிந்து கொள்' என்று சொல்லுவது முட்டாள்தனம். அதன் பின்னர் அந்தக் கைலியை அந்த நபருக்கே கொடுத்து விடுவார்களா? அதைவிட இனி மலேசியர்கள் நீண்ட காற்சட்டையே அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது  நல்லதாக இருக்கும்!

No comments:

Post a Comment