Saturday 16 December 2023

அது நமது வேலையல்ல!

 

மித்ராவின் செயல்பாடுகள் ஓரளவு  நமக்குத் திருப்தி அளிக்கின்றன.

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக  மித்ரா தொடர்ந்து பாடுபடும் என்பதாக  மித்ராவின் தலைவர்  டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  உறுதியளித்திருக்கிறார்..    கல்லூரி மாணவர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம்  அளிக்க வேண்டும்.  அளிப்பதாகவே நம்புகிறோம்.

ஆனால் ஒரு விஷயம் பளிச் எனத் தெரிகிறது.  மித்ரா என்பதே இந்தியரின் உருமாற்றுத் திட்டம் தான்.  அது ஆரம்பிக்கப்பட்ட போது  இந்தியர்களை வியாபாரிகளாக  உருவாக்க வேண்டும்  என்கிற பெருந்திட்டம் இருந்தது. அத்திட்டம் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது  போன்ற  தோற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுவும் டத்தோ  ரமணன்  வந்த பிறகு  அவர் அதனைப் பின்னுக்குத்தள்ள முயற்சி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது.

அது அவரின் குற்றம் அல்ல.  சிறு வியாபாரிகளுக்கு உதவுவது  என்பது மிகச் சிக்கலான ஒன்றாகவே தோன்றுகிறது. சிறு வியாபாரிகள், குறு வியாபாரிகள்  இவர்களுக்கு  உதவுவது பிரச்சனைக்குரியதாக  இருந்தாலும் அதனை மித்ரா கைவிட்டுவிடக் கூடாது  என்பதே நமது ஆலோசனையாக இருக்கும்.  ஒவ்வொரு வருடமும் மித்ரா எத்தனை வியாபாரிகளை உருவாக்கிருக்கிறது  என்கிற  விபரமும் பொது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

இந்த நேரத்தில் மித்ரா  வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது ஏன் என்று கேள்வி கேட்பது சரியானதாக இருக்குமென்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு இலட்சம் ரிங்கிட்  ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அது ஏன் என்று கேட்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

இந்தியர் உருமாற்றமும் தொகுதிக்கு ஒரு இலட்சம் கொடுப்பதும்  என்ன சம்பந்தம் என்பது  நமக்குப் புரியவில்லை.  இதில் என்ன 'லாஜிக்' என்பதும் விளங்கவில்லை. தொகுதிக்குப் பணம் கொடுப்பது  அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை ஏன் மித்ரா ஏற்றுக் கொண்டது என்பது   டத்தோ ரமணனுக்குத் தான் வெளிச்சம்.  ஏதோ எப்படியாவது  கொடுத்த பணத்தை  முடித்துவிட வேண்டும் என்கிற  கட்டாயம் தான்  ரமணனிடம்  தெரிகிறது.  அது சரியா?  என்றால் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக  சந்தேகப்படுவதற்கு நிறையவே வழி இருக்கிறது. பணத்தை 'இப்படிக் கொடுத்து அப்படி வாங்கக்கூடிய' சாத்தியம் உண்டு  அல்லவா? மக்கள் சந்தேகப்படுவதற்கு நிறயவே சாத்தியங்கள் உண்டு.  ஆனால் இதில் பிரதமர் துறை சம்பந்தப்பட்டிருப்பதால்  எதுவும் ஆகாது என்கிற நம்பிக்கையும் உண்டு.

ஆக, ஏற்கனவே சொன்னது போல  வியாபாரிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதே சமயத்தில் நாடாளுமன்றங்களுக்கு ஒரு இலட்சம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது நமது ஆலோசனை. பார்ப்போமே!

No comments:

Post a Comment