நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இப்படியும் நடக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமான ஒன்று தான்.
ஓட்டுநர் உரிமம் பெற நாம் எத்தனை முறை முயற்சி செய்திருப்போம்? இரண்டு மூன்று முறை இருக்கலாம்! நான் இரண்டாவது முறை. முதல் முறை நிச்சயம் வெற்றி பெற முடியாது என்று முன்னமே தகவல் கிடைத்துவிடும். அதனால் இரண்டாவது முறை தான். முதல் முறையே வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான சில வழிமுறைகள் உண்டு. அதற்கு நாம் தயார் என்றால் அதுவும் கிடைத்துவிடும்.
ஆனால் லண்டனில் வெளியான செய்திகளின் படி பலர் பலமுறை தோல்வி கண்டிருக்கின்றனர். அதிலே ஒருவர் சுமார் 59 முறை தோல்வி கண்டு 60-வது முறை வெற்றி கண்டிருக்கிறார்!
நான் அதனைக்கண்டு ஆச்சரியப்பட்டாலும் ஒரு விஷயத்தைக் கொஞ்ச ஆழமாகப் பார்க்கிறேன். ஓட்டுநர் உரிமம் பெற அவ்வளவு கடினம் என்றால் அங்கு மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது பொருள். நம் நாட்டில் விபத்துகள் அதிகம் நடக்கிறது என்றால் மனிதர் உயிருக்கு என்ன ஆனால் என்ன என்கிற அலட்சியம் அதிகம் தெரிகிறது.
நம் நாட்டில் உரிமம் என்பது பல வடிவங்களில் கிடைக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பெற்று விடலாம் என்பது சாதாரணமாகவே அனைவருக்கும் தெரியும். நான் உரிமம் எடுக்கும் போது உணவகத்தில் வேலை செய்த ஒரு நபர் தனக்கு நேரம் இல்லாததால் பயிற்சி எதுவும் எடுக்காமலே, கொஞ்ச கூடுதல் பணம் கொடுத்து, உரிமம் எடுத்துவிட்டார்! அந்த வசதிகள் எல்லாம் இங்கே உண்டு. அதனால் தான் எப்போது பார்த்தாலும் எங்கேயாவது விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இருந்தாலும் ஒருவர் 59 முறை என்பது ரொம்ப ரொம்ப அதிகம் தான். ஆனால் என்ன செய்வது? அரைகுறைகளுக்கு உரிமம் கொடுத்துவிட்டு அதன் பின் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? நாம் தானே? நமது மக்கள் தானே? ஒவ்வொரு நாளும் இங்கே விபத்து, அங்கே விபத்து என்று பத்திரிக்கைகளில் பார்க்கும் போது மனதுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறது.
நம் நாட்டில் இன்றைய சூழல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடக்கின்ற விபத்துகளைப் பார்க்கும் போது இன்றும் அந்த பழைய முறை மாறாமல் காப்பாற்றப்படுகின்றது என்று தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் ஏன் இத்துணை விபத்துகள்?
எப்படியோ! 59 முறை தோல்வியடைந்து 60- ஆவது முறை வெற்றி பெற்றவரைப் பாராட்டுகிறேன்! காரணம் எந்த குறுக்கு வழியும் அவரிடம் இல்லையே!
No comments:
Post a Comment