உடைப்பட்ட ஸ்ரீ நாகம்மன் ஆலயம், செந்துல்
கோவில் பிரச்சனை என்றால் அது எல்லாகாலங்களிலும் நம்மைத் தொடரும் பிரச்சனையாகத்தான் இருந்து வருகின்றது!
இந்து சங்கம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அவர்களாலும் முடியவில்லை. கோவில் கணக்கெடுப்பு என்று ஒன்று எடுத்தால் அதற்குள் புதிதாக கோவில்கள் முளைத்து விடுகின்றன! நமது மக்களையும் குறைசொல்ல முடியவில்லை. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க அவர்கள் தயாரில்லை.
சமீபத்தில் செந்துல் ஸ்ரீநாகம்மன் ஆலயம் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தாரால் திடீரென ஒரு நாள் காலை எந்த அறிவிப்பும் இன்றி உடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அரசியல்வாதிகள் கைகளில் ஆலயம் அகப்பட்டுக் கொண்டு 'நீயா நானா' போட்டி நடந்து கொண்டிருக்கிறது!
இதில் சவாரஸ்யமான செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் இந்த ஆலயத்தை அப்புறப்படுத்தச் சொல்லி ஆலய நிர்வாகத்திற்குப் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிப்பு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கோவில் நிர்வாகத்தை நாம் கேள்வி கேட்க முடியாது. நமக்குள்ளேயே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளலாம். இவர்கள் ஏன் அப்போதே நடவடிக்க எடுக்காமல் விட்டனர்? அப்போது அரியணையில் இருந்தவர்கள் ம.இ.கா.வினர் தான். பதிமூன்று ஆண்டுகள் பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது நடப்பு அரசாங்கத்தின் மீது பழிபோடுகின்றனர்.
உண்மையைச் சொன்னால் இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோவில் நிலம் அமைந்திருப்பது தனியார் நிலத்தில். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்போதோ அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
கடந்த ஓர் ஆண்டாகத்தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஏன் மேம்பாட்டு நிறுவனம் திடீரென உடைக்கும் முடிவை எடுத்தது என்பது புரியவில்லை. அதில் ஏதும் அரசியல் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.
பதின்மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ம.இ.கா.வினர் கொதித்து எழுகின்றனர்! என்ன செய்வது நமது அரசியல் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. கோவிலுக்கே இந்த நிலைமை என்றால் எல்லாப் பிரச்சனைகளிலும் இப்படித்தான் பதின்மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் செயல்படுவார்களோ!
கோவில் சொத்து குல நாசம் என்பார்கள். . எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.
No comments:
Post a Comment