''ஜாக்கிம்' அமைப்பு பல வேளைகளில் தனது எல்லையை மீறி செயல்படுவதாகவே நமக்குத் தோன்றுகிறது.
கேக் விற்பனையாளர்கள் தாங்கள் விற்கும் கேக்குகளில் 'மெரி கிறிஸ்துமஸ்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று யார் கொடுத்த அதிகாரத்தில் அவர்கள் பேசுகிறார்கள்?
கிறிஸ்துமஸ் திருவிழா என்பது இந்நாட்டிற்குப் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு விழாவா? எத்தனையோ ஆண்டுகளாக அந்தத் திருவிழா இந்நாட்டில் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மட்டும் அல்ல. தீபாவளி, சீனப்புத்தாண்டு, ஹரிராயா போன்ற திருவிழாக்கள் காலங்காலமாக கொண்டாடப்படுகின்ற திருவிழாகள். எல்லாப் பெருநாள்களிலும் பலவித கொண்டாட்டங்கள் உள்ளன.
பெருநாள் காலங்கள் என்றாலே வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களைக் கவர பலவித அலங்காரங்கள் செய்வர். கேக் விற்பனை செய்கின்ற கடைகளில் அவர்களும் தங்களது பொருள் விற்பனைக்கு இது போன்ற காலங்களில் 'மெரி கிறிஸ்மஸ்' என்று எழுத்துக்களில் விளம்பரம் செய்வார்கள். இதெல்லாம் சாதாரண விஷயம். கிறிஸ்துமஸ் விழா என்பதை தவிர அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது.
ஆனால் ஒரு சாதாரண ஜாக்கிம் என்கிற அரசாங்க அமைப்பு எப்படி இது போன்ற நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? அவர்களுடைய வேலை எல்லாம் உணவு பொருட்களில் தடை செய்யப்பட்டவைகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது தான். அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அதனை மீறி செயல்படுகிறார்கள் என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.
அதை எழுதக்கூடாது, இதை எழுதக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?
கிறிஸ்துமஸ் திருவிழா என்பது யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அன்றைய தினம் நாட்டில் விடுமுறை தினம். உல்கெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள். அதே போல மலேசியாவிலும் உண்டு. இதில் வர்த்தகர்களின் பங்கு அதிக,ம். வர்த்தகர்களுக்குத் தங்களது பொருள்களை விற்பனை செய்வதில் அதிக அக்கறை உண்டு. ஆண்டு கடைசியில் மிச்சம் மீதி இருப்பவைகளை விற்றுத் தீர்க்க வேண்டும்.
ஓர் அரசாங்க அமைப்பான ஜாக்கிம் வர்த்தர்களின் தொழிலில் தலையிடுவது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருக்கக் கூடாது என்பது போல நடந்து கொள்வது, அதற்கு அப்புறம் பெருநாட்களே கொண்டாடக் கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்புக்களை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்! அவர்களைக் கேட்பவர்கள் யார்?
நமக்குத் தெரிந்தவரை அவர்கள் வேலையெல்லாம் ஹோட்டல் ஹோட்டாலாகப் போய் அறை கதவுகளைத் தட்டுவதுதான். மற்றவைகள் எல்லாம் அவர்களே இழுத்துப் போட்டுச் செய்வதாகத்தான் நாம் எடுத்துக் கொள்வோம்.
எல்லை மீறுவதை நம்மால் வரவேற்க முடியாது!
No comments:
Post a Comment