Sunday 24 December 2023

விருந்திலும் இப்படியா?

 

என்ன கொடூர மனிதர்கள்?  திருமணம் முடிந்தாயிற்று. அதாவது தாலி கட்டியாயிற்று.      இனி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  திருமண விருந்து தான் பாக்கி.  அதுவும் முடிந்துவிட்டால்  எல்லாம் சுபம், அவ்வளவு தான்.

ஆனாலும்  ஒரு சிக்கல்   விருந்து தொடங்கும்  நேரமாகிவிட்டது.  சமையல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  நிறுவனம் இன்னும் வந்து சேரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இப்போது மணப்பெண் வீட்டாருக்குப் பெரும் சிக்கல்.  "எங்கடா போய் தொலைஞ்சீங்க!" என்று ஏசுவதைத் தவிர வேறு எதையும் செய்யுக்கூடிய  நிலையில் அவர்கள் இல்லை.  ஆமாம் 1000 பேருக்கு சாப்பாடு ஏற்பாடுகள் செய்துவிட்டு, 13,000 வெள்ளியையும்  கொடுத்து ஏமாந்து விட்டு இப்போது    கடைசி நேரத்தில்  கழுத்தை அறுத்துவிட்டார்களே என்று நினைக்கும் போது யாரிடம் சொல்லி புலம்புவது?

இருந்தாலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு  ஏதாவது செய்ய வேண்டுமே என்று  நினைத்து  உடனடியாகக் களம் இறங்கினார்கள்.  ஆனால் அவர்களுக்குச் சுமார் 400 பேருக்குத் தான் சமைத்துப் போட    முடிந்தது.  பலவித உணவுகளைச் சுவைக்க வேண்டியவர்கள்  ஏதோ ஒரு கோழி  கறியோடு  முடித்துக் கொண்டார்கள்.  இன்னும் ஒரு சில புண்ணியவான்கள்  அப்பம் பாலேக் போன்ற உணவு பொருள்களைக்  வாங்கிக் கொடுத்து  அவர்களுக்கு  உதவினார்கள்.  ஏதோ ஒரு வகையில் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி!

இப்போது நம் நாட்டில்  நிறையவே ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  பெயர், ஊர் எல்லாம் தெரிந்து கொண்டு அவர்களின் வங்கிப் பணத்தைக் களவாடுகிறார்கள். நிறையவே தில்லுமுள்ளுகள்  நடந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் திருமணங்களில்  கூட இப்படி நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை..  ஏன் நம்  இந்தியர் திருமணங்களில்  நாம் இப்படிக் கேள்விப்பட்டதுமில்லை.  ஒரு வேளை  நாம் செய்கின்ற முறை சரியானதாகக்  கூட இருக்கலாம்.  நாம் ஆன்லைனில் ஆர்டர் செயவதில்லை.   நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி  நாம் முடிவெடுக்கிறோம். அதுவே சிறந்த முறையாக இருக்கலாம்.  அல்லது நமது திருமணங்களில் இப்படி நடப்பதை நான் அறியாமல் இருக்கலாம்.

ஒன்றை நாம் குறிப்பட வேண்டும்.  இப்படி ஒரு நிறுவனம் நடத்துவதே சாதாரண விஷயமல்ல. அதுவே நமது தொழிலாகிவிட்டது. அதனை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். ஏமாற்றிப் பிழைப்பது என்பது நீண்ட நாள் ஓடாது.  சிறிது காலம் ஏமாற்றலாம். நீண்ட நாள் ஓடாது.

ஏமாற்று வேலை என்பது கொஞ்சம் நாள் தான்  தாக்குப் பிடிக்கும். அந்தப் பிழைப்பு நமக்கு வேண்டவே வேண்டாம்!

No comments:

Post a Comment