பினாங்கு மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்தும், தமிழ் வாழ்த்தும் பாட முடியாதபடி தடை செய்தவர் யார் என்று கல்வி அமைச்சர் தேடிக் கொண்டிருப்பது போல நாமும் இந்த தமிழ்ச்சமூகமும் அவரோடு சேர்ந்து அனைத்து மக்களும் தேடிக் கொண்டிருக்கிறோம்!
இதில் பல கேள்விகள் பலரால் கேட்கப்பட்டு அதற்கு எந்த பதிலும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. கல்வி அமைச்சு மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதிலே சந்தேகமில்லை. காரணம் மௌனத்தைக் கடைப்பிடித்தால் இந்த பிரச்சனையை விரைவில் இந்தியர் சமுதாயம் மறந்து விடுவர் என்பதிலே அவர்களுக்கு வலுவான ஆதாரங்கள் உண்டு.
கடைசியாக இந்தப் பிரச்சனையை மேல்சபையில் எழுப்பியவர் செனட்டர் லிஙேஸ்வரன். அவரையும் நாம் வாழ்த்துவோம். இப்போது இந்த பிரச்சனை மேல்சபை, நாடாளுமன்றம் அனைத்து உயர் சபைகளிலும் எழுப்பப்பட்டு விட்டது. ஆனால் பதில் இதுவரை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
இப்போது நம்மிடையே ஒரு கேள்வி. மேல்சபையில் கேள்வி எழுப்புவது, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது இதனால் எந்தப் பயனும் உண்டா என்பது தான். இதுவரை அவர்கள் கேள்வி எழுப்பி என்ன தான் சாதித்தார்கள்? ஒன்றுமில்ல!
இந்த இரு சபைகளிலும் கேள்வி எழுப்புவதை சும்மா ஒரு மரபாகத் தான் வைத்திருக்கிறார்கள் நமது பிரதிநிதிகள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் என்று நாம் கேட்டாலும் அவர்களும் வேறு என்ன தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் யோசிக்க வேண்டும். சும்மா ஒப்புக்காக நாங்கள் இதனைப் பேசினோம் என்று அலட்சியமாக இருக்க முடியாது. பலருக்கு, நாங்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினோம் என்று தங்களது பேச்சு அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்! அது போதாது. வெளியே உள்ளவர்களும் அதைத்தான் செய்கிறார்கள். அப்படியென்றால் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் அவைகளில் கேள்விகளை எழுப்பினீர்கள். அத்தோடு உங்கள் வேலை முடிந்ததா? அதன் பின்னர் என்ன நடந்தது? நேரடியாக அமைச்சரைப் பார்த்து மீண்டும் அந்த கேள்வியை எழுப்பி அவரோடு சந்திப்பு நடத்தி தொடராக ஏதேனும் வேலை நடந்ததா? அப்படி நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் ஒன்று தெரிகிறது. நீங்கள் உண்மையானவர் இல்லை. எல்லாம் வெளி வேடம் என்று புரிகிறது.
சரி, இப்போது என்ன தான் நடக்கிறது? ஒன்றுமே நடக்கவில்லை. பிரச்சனை முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இது நாள்வரை ஒன்றும் நடக்கவில்லை என்றால் இனிமேலா நடக்கப் போகிறது? வழக்கம் போல இனி என்ன செய்யலாம் அன்று அவர்கள் தரப்பு புதிதாக ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிக் கொண்டு தான் இருப்பார்கள்!
நடந்தது சரி! அதன் பின் என்ன என்ன நடக்கிறது, என்ன நடந்தது? என்று உங்களைப்போலவே நமக்கும் ஆசை!
No comments:
Post a Comment